சுடச்சுட

    

    திண்டுக்கல் அரண்மனை குளம் பகுதியில் திப்பு சுல்தான் மணிமண்டபம்

    By திண்டுக்கல்  |   Published on : 23rd December 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி ஆகியோருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் அரண்மனை குளம் பகுதியில் உள்ள வக்பு வாரியத்தின் இடம் வழங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு, ஒரே இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மணிமண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. திண்டுக்கல் நகரில், சரியான இடம் அமையாததால், தாடிக்கொம்பு அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியிலும், செம்பட்டி அடுத்துள்ள சீவல்சரகு ஊராட்சிக்குள்பட்ட பகுதியிலும் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு, அந்தந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அந்த இடங்களை தேர்வு செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே மணிமண்டபம் அமைப்பதற்காக, தமிழக அரசு மூலம் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடம் தேர்வு செய்யப்படாததால், மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில், மணிமண்டபம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அனைத்து கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்தை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், மணிமண்டபத்திற்கான இடத்தை, வக்பு வாரியத்திற்கு சொந்தமான அரண்மனை குளத்தில் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, அரண்மனை குளம் பகுதியில் திப்பு சுல்தான் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

    அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில், பாமக மாநில துணைத் தலைவர் ஜஸ்டின் திரவியம், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் சந்தானம், தமுமுக யாசர் அரபாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு செயலர் ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai