Enable Javscript for better performance
பழனி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் வேலிமைனாக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பழனி பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் வேலிமைனாக்கள்

    By பழனி,  |   Published on : 01st May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி பெரியப்பா நகரில் நகராட்சி உரக் கிடங்கு பகுதியில் புதிதாக வந்துள்ள வேலி மைனாக் கூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

    உலகில் உள்ள உயிரினங்களில் ஓர் உயிரினம் மறையும் பட்சத்தில் உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அறிவியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்கு உதாரணமாக சமீப காலமாக சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து வருவதை அவர்கள் சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து சமீப காலமாக பலரும் மேற்கொள்ளும் அரிய முயற்சிகள் காரணமாக மீண்டும் சிட்டுக்குருவிகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. அதேபோல பறவைகளால் மனிதர்களுக்கு பல நன்மைகள் மறைமுகமாக ஏற்படுகின்றன.

    பழனி நகரின் வடக்குப் பகுதியில் உள்ளது பெரியப்பா நகர். இங்கு நகராட்சியின் உரக் கிடங்கு உள்ளது. இங்கு தினமும் ஏராளமான லாரிகள் மற்றும் டிராக்டர்களில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. மழைக் காலங்களில் இக் குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் இப் பகுதி மக்கள் படும்பாடு அளவில்லாதது. அதே போல இப் பகுதியில் கொசுக்கள், ஈக்களால் ஏற்படும் தொந்தரவுகளும் ஏராளம்.

    நகராட்சி நிர்வாகமும் அவ்வப்போது இப் பகுதியில் மேற்கொள்ளும் மாஸ்கிளீனிங் இங்கு உள்ள பிரச்சினைக்கு தீர்வாக இல்லை. கடந்த சில மாதங்களாக இங்கு மிகப் பெரிய அளவிலான கொசுக்கள், மஞ்சள் நிற கொசுக்களால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். தொடர்ந்து வீடுகள் தோறும் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்த்து வீட்டைத் திறக்கவே அப் பகுதியில் அஞ்சி வந்தனர். ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஈக்களால் பெண்கள் சொல்லொண்ணா துயரமடைந்தனர். இந்த நிலையில், அப் பகுதியில் திடீரென இவற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. நகராட்சி நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்த மாற்றம் எப்படி என மக்கள் திகைத்தனர். அப்போதுதான் உரக்கிடங்கு பகுதியில் வந்த வேலி மைனாக்களாலேயே இந்த மாற்றம் என்பதை விரைவாக உணர்ந்தனர். குருவி இனத்திலும் சேராமல் மைனா இனத்திலும் சேராமல் கூட்டம், கூட்டமாக வந்த இந்த பறவைகள் காலை மற்றும் மாலை உரக்கிடங்கில் உள்ள குப்பைகள் மீதும், மின்கம்பங்களிலும் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. இவை கூட்டமாக பறக்கும் போதே பறந்து கொண்டிருக்கும் ஈக்கள், பூச்சிகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு விடுகின்றன. தவிர உரக்கிடங்கில் உள்ள குப்பைகளைக் கிளறி அதில் முட்டையில் இருந்து பூச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் ஈக்கள், கொசுக்களையும் சாப்பிட்டு விடுகின்றன.

    இதுகுறித்து அப் பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் கணேசன் கூறுகையில், இந்த பறவையினம் பற்றி தெரியவில்லை. ஆனால். இவை வந்ததில் இருந்து கொசு, ஈக்கள் பெருமளவு குறைந்துள்ளன. இவை பறந்த வண்ணமே அவற்றை பிடிக்கின்றன. நகராட்சிக்கு உதவியாக இவை சுகாதாரப் பணிகளைச் செய்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கின்றன. காலை, மாலையில் பறக்கும் இவை மதியம், இரவு நேரங்களில் அருகே உள்ள சிறுமரங்களில் தங்கி விடுகின்றன. இவற்றை வேலிமைனா என்று சிலர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் நண்பனாக விளங்கும் இவற்றை நரிக்குறவர் மற்றும் சிறுவர்கள் என பலரும் வந்து கொத்து, கொத்தாக வலை விரித்தும், சுட்டும் உணவுக்காக கொண்டு செல்கின்றனர். சிட்டுக்குருவி போல இதையும் அழித்தால் மீண்டும் ஊரில் கொசு, ஈக்கள் தொல்லை அதிகரித்துவிடும். இதை எப்படி தவிர்ப்பது என தெரியவில்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai