Enable Javscript for better performance
பூண்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்னை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானலிலிருந்து 54 கி.மீ. தொலைவில் பூண்டி ஊராட்சிக்குள்பட்ட கிளாவரை, போலூர், நாட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேல்மலை குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். கேரட், உருளை, பூண்டு விளைவிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பூண்டி ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வாய்க்கால் வசதி, சுகாதார வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையாம்.

    மலைப் பகுதியின் கடைக்கோடி கிராமமாக இருப்பதால், யாரும் இந்த மலைக் கிராமங்களுக்கு வருவதில்லை. இதனால், ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறதா அல்லது வளர்ச்சித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பது தெரியாமல் இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

    கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததால், இப் பகுதிகளில் உள்ள சிறிய குளங்கள், ஓடைகளில் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளன. இதனால், இப் பகுதிகளிலுள்ள மக்கள் 5 கி.மீ. தொலைவு சென்று, இரு சக்கர வாகனங்களிலும், ஜீப்புகளிலும் தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீருக்கே தற்போது பிரச்னை இருந்து வரும் வேளையில், விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் பெருமளவில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், விளைந்த காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கு போதுமான போக்குவரத்து வசதியில்லை. அதிகமான வாடகை கொடுத்து லாரிகளில் மதுரை, தேனி, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.

    இது குறித்து, பூண்டி ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியது: குழாயில் தண்ணீர் வந்து 3 மாதத்துக்கும் மேலாகி வருகிறது. வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து, ஊராட்சித் தலைவர் தாமோதரன் கூறுகையில், பூண்டி ஊராட்சியில் போதுமான நிதி ஒதுக்கப்படாததால், வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியவில்லை. இருப்பினும், குடிநீர்ப் பிரச்னை தீர ஒரு சில இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில போர்வெல் பழுதடைந்துள்ளன. பராமரிப்பு செய்யாமல் இருப்பதால், தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. சாலை வசதி செய்து தர பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai