Enable Javscript for better performance
போலி நியமன ஆணை மூலம் செயல் அலுவலராக நடித்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி நியமன ஆணை மூலம் செயல் அலுவலராக நடித்தவர் கைது

    By திண்டுக்கல்,  |   Published on : 01st May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலியான நியமன ஆணை தயாரித்து, கோயில் செயல் அலுவராக நடித்த இளைஞரை, போலீஸார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயல் அலுவலர் எனக் கூறிக்கொண்டு, உமாசங்கர் என்பவர் கடந்த மாதம் கோயிலுக்குச் சென்றுள்ளார். அவருக்கு, கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமையில் மரியாதை செய்யப்பட்டதாம்.

    சில நாள்கள் கழித்து, கோயிலுக்கு வந்த அவர், ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நியமன ஆணையை வழங்காததால், பொறுப்பு செயல் அலுவலரான செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில், பழனி இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், செயல் அலுவலர் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற விவரத்தை தெரிவித்துள்ளார். இதையறிந்த உமாசங்கர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (பழனி) கொடுத்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரன், குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    விசாரணையில், போலி அதிகாரியாக செயல்பட்ட உமாசங்கர் (30), தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, இந்து சமய அறநிலையத் துறையில் வேலை பெறுவதற்கு பணம் தேவைப்படுவதாக வீட்டில் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கடன் வாங்கி ரூ. 1.70 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர்.

    அந்த பணத்தை செலவு செய்த உமாசங்கர், தேனியைச் சேர்ந்த உறவினர் மூலம் போலியான நியமன ஆணை தயாரித்து, செயல் அலுவலர் வேலை கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பணம் திரட்டிக் கொடுத்த வீட்டாரை ஏமாற்றுவதற்காக, செயல் அலுவலராக நடித்த விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, உமாசங்கரை கைது செய்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai