Enable Javscript for better performance
கொடைக்கானல் குடிநீர்த் தேக்கத்தை அகலப்படுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் குடிநீர்த் தேக்கத்தை அகலப்படுத்த வேண்டும்

    By கொடைக்கானல்  |   Published on : 02nd May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் உள்ள குடிநீர்த் தேக்கத்தை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் தண்ணீரை சேமித்து வைக்க நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் முன் வரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கொடைக்கானலில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தங்களுக்குப் பணிபுரிவதற்கு பல இடங்களிலிருந்து இந்தியர்களை குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களை பணிக்கு அமர்த்தினர். அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகரை உருவாக்கினர். அந்தப் பகுதிகளில் நாளடைவில் மக்கள்தொகை அதிகரித்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீóர் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் 1913-ம் ஆண்டு அப்சர்வேட்டரி பகுதியில் 541 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப் பகுதியில் குடிநீர்த் தேக்கத்தை உருவாக்கினர்.

    குடிநீர்த் தேக்கத்தில் 10-ஏக்கரில் 25-அடி ஆழத்தில் மட்டுமே தண்ணீர் இருந்து வந்துள்ளது. அங்கிருந்து எளிதில் துருப்பிடிக்காத குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக நகர்ப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந் நேரமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது அப்போதைய மக்கள்தொகை சுமார் 1800-பேர் மட்டுமே.

    அதனைத் தொடர்ந்து நகரின் வளர்ச்சியும் மக்கள்தொகை அதிகரித்து வந்த நிலையில்,

    1990-ம் ஆண்டு மக்கள்தொகை சுமார் 22 ஆயிரம். தண்ணீர் தேவை அதிகரித்ததால் நகராட்சிக்குச் சொந்தமான மனோரஞ்சிதம் பகுதியில் 5-ஏக்கர் பரப்பளவில் 17-அடி ஆழத்தில் தமிழக அரசு புதிய குடிநீர்த் தேக்கத்தை கட்டியது. இந்த இரண்டு நீர்த் தேக்கங்களில் இருந்துதான் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு அப்சர்வேட்டரி, அண்ணாசாலை, நாயுடுபுரம் போன்ற இடங்களில் குடிநீர்த் தொட்டி கட்டி அங்கிருந்து நகராட்சிக் குழாய்களுக்கும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழாய்களுக்கும் இணைப்புக் கொடுக்கப்பட்டது. இந் நிலையில், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதில், 1996-ம் ஆண்டு புறநகர்ப் பகுதிகளான செண்பகனூர், இருதயபுரம், அட்டக்கடி ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    நகராட்சிப் பகுதிகளில் மட்டும் தற்போது 55 ஆயிரம் வசித்து வருகின்றனர். சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 15-லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. புதிய நீர்த்தேக்கத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகியது. அவற்றை சரி செய்ய 2004-ம் ஆண்டு ரூ37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கசிவை நிறுத்தும் பணி நடைபெற்றது. ஆனால், முழுமையாக கசிவை நிறுத்த முடியவில்லை.

    கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு மழையளவு குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் லாட்ஜ்கள், ஹோட்டல்களில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது சிரமமாகி வருகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து ஓய்வுபெற்ற நகராட்சி பணியாளர் ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் உள்ள குடிநீர்த் தேக்கம் அப்போது குறைந்த அளவு மக்கள் இருந்ததால், ஆங்கிலேயர் அப்போது தேவைக்கான கொள்ளளவுக்கு குடிநீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் மக்கள் தொகை அதிகம் ஏற்படும் என்ற காரணத்துக்காக 541-ஏக்கரில் குடிநீர்த் தேக்கத்தை உருவாக்கினர். ஆனால், நகராட்சியை நிர்வகிப்பவர்களும், நகர்மன்றத் தலைவராக இருப்பவர்களும் இந்த குடிநீர்த் தேக்கத்தை சுற்றியுள்ள யூக்கலிப்டஸ், பைன், ரப்பர் ஆகிய மரங்களை அகற்றியும் 75-ஏக்கரில் குடிநீர்த் தேக்கத்தை அகலப்படுத்தி சோலா மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், மழைக் காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருக்கும். குடிநீர்த் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பில்லை. கடந்த 20-ஆண்டுகளாக நகராட்சியை நிர்வாகித்த அதிகாரிகள்,நகர்மன்றத் தலைவர்கள் இத்தகைய செயல்களைச் செய்யவில்லை. இதனால் தொடர்ந்து கொடைக்கானலில் குடிதண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் இப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தண்ணீர் தேவைக்கு மாற்று ஏற்பாடும் குடிநீர்த் தேக்கத்தை அகலப்படுத்தியும் அங்குள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றி குளுமை பெறக் கூடிய சோலா மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன் கூறியதாவது:

    கொடைக்கானல் ஏரியில் லாரி மூலம் தண்ணீர் எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவற்றை கண்காணிப்பதற்கு திண்டுக்கல் நகராட்சிப் பணியாளர்கள் கொடைக்கானலில் தங்கி ஆய்வு நடத்தி வருகின்றனர். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஊற்றுகளிலும், தனியார் கிணறுகளிலுள்ள நீரும் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai