Enable Javscript for better performance
பழனியில் பலத்த பாதுகாப்பு: ரயில்களில் தீவிர சோதனை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை ரயில் நிலைய வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து பழனி ரயில் நிலையம், மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை குண்டு வெடித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள், கோயில்களுக்கு பாதுகாப்புப் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய கோயில் நகரான பழனியில் வியாழக்கிழமை காலை முதலே ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மலைக் கோயிலில் கூடுதல் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பழனி ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான ரயில்வே போலீஸார் ரயில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். பழனியில் இருந்து சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்செந்தூர் செல்லும் ரயில்களும், அதேபோல எதிர்மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்களிலும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    மேலும், ரயில்களில் துப்பாக்கி ஏந்திய இரு போலீஸாரும் பாதுகாப்புக்காக சென்றனர். பழனி பேருந்து நிலையத்திலும், மலைக்கோயிலிலும் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் தலைமையில் போலீஸார் மூலம் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மலைக் கோயிலில் ரோப்கார், விஞ்ச் நிலையங்களில் பக்தர்களின் பைகள் ஹேண்ட் மெட்டல் டிடெக்டரில் ஆய்வு செய்யப்பட்டது.

    படிவழிப்பாதை உள்ளிட்ட பல இடங்களிலும் டோர்பிரேம் டிடெக்டர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மலைக் கோயிலில் தங்க ரதம், தங்க கோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளும், பக்தர்களும் அச்சமின்றி கடமைகளை மேற்கொண்டனர்.

    திண்டுக்கல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வியாழக்கிழமை காலை குண்டு வெடித்தது. இதில், ஒரு பெண் உயிரிழந்தார். பலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திண்டுக்கல் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் திருச்சி பயணிகள் ரயில், மயிலாடுதுறை, ஈரோடு, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பயணிகளிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது. சூட்கேஸ், உடைமைகள் என பயணிகள் கொண்டுவந்திருந்த அனைத்துப் பொருள்களும் சோதனையிடப்பட்டன.

    இதற்காக, உள்ளூர் போலீஸாருடன், போலீஸ் இளைஞர் பாதுகாப்புப் படையினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், டோர் பிரேம் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai