Enable Javscript for better performance
பழனி திருக்கோயிலுக்கு மாற்றுத் திறனாளிகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி திருக்கோயிலுக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.

    பழனி திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கத்திடம் அச் சங்கத்தின் நகரத் தலைவர் அப்பு, செயலாளர் பகத்சிங், பொருளாளர் மோகனா உள்ளிட்ட ஏராளமானோர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பழனி திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்ய வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரோப்கார் மற்றும் வின்ச் நிலையத்தில் மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் என இருவருக்கு இலவச அனுமதியும், தரிசனத்துக்கு முன்னுரிமையும் வழங்க வேண்டும். மேலும் அதற்கான அறிவிப்புப் பதாகைகளை அனைவரும் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

    மேலும், மலைக்கோயில் அன்னதான மண்டபத்துக்கு செல்லவும் முன்னுரிமை வழங்க வேண்டும், திருக்கோயிலுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளத்துடன் பாதை அமைத்துத் தரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட ஏராளமான ஆண்களும், பெண்களும் பழனியில் விடப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கிரிவீதியில் இவர்களில் பலரும் பாலியல் தொந்தரவுக்கு ஆட்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே இதுபோன்ற மனிதஉரிமை மீறலை தவிர்க்க திருக்கோயில் நிர்வாகம் சார்பில் காப்பகம் அமைக்கவேண்டும், அல்லது அருகே உள்ள மனநலக் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai