Enable Javscript for better performance
புத்துயிர் பெறுமா பட்டலாங்காடு நறுமண சுற்றுலாத் திட்டம்?- Dinamani

சுடச்சுட

    

    புத்துயிர் பெறுமா பட்டலாங்காடு நறுமண சுற்றுலாத் திட்டம்?

    By திண்டுக்கல்  |   Published on : 02nd May 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தடியன்குடிசை மற்றும் தாண்டிக்குடி இடையே பட்டலாங்காடு பகுதியில் அமைக்கப்பட்ட நறுமண சுற்றுலாத் திட்டம், புத்துயிர் பெறவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆன்மிகச் சுற்றுலாத் தலமாகவும், கொடைக்கானல் இன்ப சுற்றுலாத் தலமாகவும் சிறப்புற்று விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் திருப்தி அடையச் செய்யும் நோக்கில், கடந்த 2009ஆம் ஆண்டு புதிதாக நறுமண சுற்றுலாத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    கீழ்பழனி மலையில் தடியன்குடிசை மற்றும் தாண்டிக்குடி இடையே பட்டலாங்காடு பகுதியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் பகுதியில் காபி, மிளகு, ஆரஞ்சு, கொய்மலர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், மலபார் கிரே ஹாண்டில் (மலபார் இருவாயன்), குரைக்கும் மான் (கேளை ஆடு), சாம்பார் நிற அணில், மலபார் தீ காக்கை (மலபார் ட்ராகன்), தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வணத்துப்பூச்சியான சதர்ன் பேர்டு விங், ரெட் ஹெலன், புளூ மார்மன் போன்ற அரிய வகை உயிரினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதேபோல், 80 வகையான பறவை இனங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

    இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்க முடியும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    பட்டலாங்காட்டிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இதற்கு போதுமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

    சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதி பராமரிப்பு, உணவகம், சுற்றுலா வழிகாட்டிகள் என அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படாததால், நறுமண சுற்றுலாத் திட்டம் முழுமையாக வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் தமிழ்நாடு பசுமை இயக்க நிர்வாகி என். அருண் சங்கர்.

    மேலும் அவர் கூறியது: நறுமண சுற்றுலாத் திட்டத்தில், கற்கால மனிதன் வாழ்ந்த குகை, எதிரொலிப் பாறை போன்ற சிறப்புகளும் உள்ளன. எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றும்பட்சத்தில், சுற்றுலா ஆர்வலர்களை முழு அளவில் பட்டலாங்காடு ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றார்.

    இதே பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தேன் பண்ணை போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், கடந்த 10ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.

    அதே நிலை நறுமண சுற்றுலாத் திட்டத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே, இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai