Enable Javscript for better performance
வத்தலகுண்டில் குடிநீர் தட்டுப்பாடு ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை - Dinamani

சுடச்சுட

    

    வத்தலகுண்டில் குடிநீர் தட்டுப்பாடு ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை

    By வத்தலகுண்டு  |   Published on : 02nd May 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு நகரில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நகரில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டினால், குழாயில் 45 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விடப்படுகிறது. எனவே, ஒரு குடம் தண்ணீர் ரூ. 5-க்கு வாங்கும் நிலை உள்ளது. இந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டினால், வத்தலகுண்டு காந்தி நகரில் உள்ள 1, 18 ஆவது வார்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இப் பிரச்னை தொடர்பாக, வத்தலகுண்டு பேருராட்சி செயல் அலுவலர் கமருதீனிடம் கேட்டபோது, வத்தலகுண்டு நகரில் 22,935 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 17 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது 5 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது.

    தற்போது, மஞ்சளாறு அணைப் பகுதியில் உள்ள 2 கிணறுகளில் இருந்தும் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, காமக்காபட்டியில் தனியார் தோட்டத்திலுள்ள இரு கிணறுகளின் தணணீர் விலைக்கு வாங்கப்பட்டு, 20 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நகர் முழுவதும் ரூ. 37 லட்சம் செலவில் 16 மினி பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காந்தி நகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. மஞ்சளாறு அணைப் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் 2 புதிய கிணறுகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     

    ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் எலுமிச்சை விலை  கிலோ ரூ.130ஆக உயர்வு

    ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில், ஒரு கிலோ எலுமிச்சை ரூ. 130 வரை விற்பனையானது.

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு, மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள வடகாடு, பெத்தேல்புரம், பாச்சலூர், கே.சி.பட்டி, தாண்டிக்குடி, ஆடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் எலுமிச்சை வரத்து உள்ளது.

    தற்போது, போதிய மழை இல்லாததால், எலுமிச்சை வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. எனவே, இச் சந்தைக்கு திருச்சி, மணப்பாறை, தென்காசி, புளியக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சை விற்பனை வருகிறது. வியாழக்கிழமை, ஒரு கிலோ எலுமிச்சை ரூ. 125 முதல் ரூ. 130 வரை விற்பனையானது.

    இது குறித்து, எலுமிச்சை வியாபாரி சேகர் கூறுகையில், எலுமிச்சை விலை சராசரியாக ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்பனையாகும். ஆனால், போதிய மழை இல்லாமல் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டதால், விலை அதிகரித்துள்ளது. எனது வாழ்நாளில் ஒரு கிலோ ரூ. 130 வரைக்கும் விற்பனையாவது இதுவே முதல் முறை. அதையும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai