Enable Javscript for better performance
தேங்காய் விளைச்சல் குறைவால் தென்னை நார் கயிறு தொழில் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேங்காய் விளைச்சல் குறைவால் தென்னை நார் கயிறு தொழில் பாதிப்பு

    By நத்தம்  |   Published on : 03rd May 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேங்காய் விளைச்சல் குறைவால், நார் கயிறு தயாரிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது.

    திண்டுக்கல் செல்லும் சாலையில் நத்தத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒத்தக்கடை கிராமம். இந்த கிராமத்தில் தென்னை நார் கயிறு தயாரிப்பதே முக்கியத் தொழில். தேங்காய் பிரித்து எடுக்கப்பட்ட பின் உள்ள தென்னை மட்டைகளை பக்குவப்படுத்தி மஞ்சி உருவாக்கப்படுகிறது. இந்த மஞ்சியில் இருந்து தான் கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தென்னை மஞ்சியில் கயிறு தயாரிக்கும் பணியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சாலையின் இருபக்கமும் மரங்களின் நிழலில் இரும்பு சக்கர சுழல் மிஷின் அமைத்து தென்னை மஞ்சி நார்களை பயன்படுத்தி கயிறு தயாரிக்கின்றனர்.

    வெளிமாவட்டங்கள், மற்றும் நத்தம் பகுதியிலிருந்து லாரி லாரியாக தென்னை நார் மஞ்சி இங்கு வந்து இறங்கியது ஒரு காலம் என்றாகிவிட்டது. தற்போது பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து தான் நார்மஞ்சிகள் வருகின்றன.

    ஒரு லாரிக்கு தலா 35 கிலோ கொண்ட 110 கட்டுகள் தென்னை நார்மஞ்சிகள் சுமார் 4 டன் கொண்டு வந்து இறக்கப்படுகிறது.

    கடுமையான வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைந்து விட்டது. தேங்காய் மட்டை வரத்து குறைந்துள்ளது. இதுவரை 35 கிலோ கொண்ட ஒரு கட்டு மஞ்சி ரூ.550க்கு விற்கப்பட்டது. தற்போது இது ரூ.850-ஆக உயர்ந்துள்ளது.

    மஞ்சி விலை உயர்வு காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சுமார் 100 பேர் மட்டுமே கயிறு தயாரித்து வருகின்றனர்.

    காலையிலிருந்து மாலை வரை வேலைபார்த்தாலும் அவரவர் உற்பத்தி செய்ததற்கு ஏற்ப ரூ.100 முதல் 150 வரை மட்டுமே கூலி கிடைக்கிறது. தினமும் 100 கட்டுகள் வரை இங்கு கயிறாக இங்கு திரிக்கப்படுகிறது.

    ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் பெறுமான கயிறு தயாரிக்கப்படுகிறது. தொழிலாளர் சம்பளமாக ரூ.40 ஆயிரமும், தென்னை மஞ்சிக்கு ரூ.60ஆயிரமும் செலவாகிறது. அதாவது, வரவுக்கும் செலவுக்கும் சரியாகிறது என்கிறார், அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர் கு.வெங்கடேசன்.

    அவர் மேலும் கூறியதாவது: தேங்காய் விளைச்சல் பாதிப்பால் மட்டை வரத்து குறைந்தது. தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடைக்கிறது. லாபம் இல்லை.

    இரும்புச் சக்கரத்தை கைவலிக்க சுற்றி வடக்கயிறு, வால்கயிறு, தண்ணீர்கயிறு, கொச்சக்கயிறு என பலவகை கயிறுகளை தயாரிக்கிறோம். கயிறு தயாரித்து தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்புகிறோம். நத்தம் ஒத்தக்கடை கயிறு என்றாலே திடமாகவும் தரமாகவும் உறுதியாகவும் உழைப்புத்தன்மை நிறைந்தது என்றும் நம்பிக்கை உண்டு.

    நாளுக்கு நாள் நலிந்து வரும் எங்களது தொழிலைக் காப்பாற்ற அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai