Enable Javscript for better performance
பழனியில் உலக நலன், மழை வேண்டி சிறப்பு பூஜைகள்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அடிவாரம் சங்கராலயத்தில் வெள்ளிக்கிழமை உலக நலன், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பழனி அடிவாரம் சங்கராலயத்தில் வெள்ளிக்கிழமை அக்க்ஷய திருதியை நாளை முன்னிட்டு உலக நலம், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கங்கோத்ரி ஸ்ரீகாளிகாம்பாள் பீடம் நாராயண தீர்த்த சுவாமிகள் பூஜைகளைச் செய்தார்.

    இந்தியாவை மூன்று முறை நடைபயணமாக சுற்றிவந்தவர் கங்கோத்ரி ஸ்ரீகாளிகாம்பாள் பீடம் நாராயண சுவாமிகள். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஆட்டீஸம் என்ற குறைபாடுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவரது சிகிச்சையினால் குறை நீங்கியுள்ளனராம். பூஜை நிறைவில் கங்கோத்ரி நாராயண சுவாமிகள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் மழை மிகவும் குறைந்துவிட்டது. நதிகள் வழிபாடு குறைந்ததே இதற்கு காரணமாகும். தாமிரபரணி, காவிரி போன்ற நதிக்கரைகளில் நதிவழிபாடுகள் நடத்தப்படவேண்டும். நதிவழிபாடு குருவழிபாட்டுக்கு சமம். நதிகளை வணங்கினாலே மழைப்பொழிவு குறையாமல் இருக்கும் என வேதங்கள் கூறுகின்றன.

    மேலும் பல கோயில்களில் ஐந்து கால பூஜைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. வழிபாடுகள் பெருகினால் விவசாயம் செழிக்கும். தானியங்கள் அதிகரிக்கும். கங்கோத்ரி காளிகாமட் சார்பில் தமிழகத்தில் வரும் ஜூன் மாத இறுதியில் உலக ஷேமம், மழை வேண்டி சப்தகோடி ஜபம் நடைபெறவுள்ளது. இதற்காக கோவில்பட்டி, ராஜபாளையம், பழனி, குற்றாலத்தை அடுத்த புளியரை, பாபநாசம், சென்னையை அடுத்த ராணிப்பேட்டை மற்றும் திருச்சி திருவானைக்காவல் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தேர்வு செய்யப்பட்ட வேதவிற்பன்னர்களைக் கொண்டு தினமும் ஐந்து லட்சம் காயத்ரி ஜெபங்கள் என இருபத்தோரு நாள்கள் உச்சரிக்கப்படும். ஏழு ஊர்களிலும் ஒரே நேரத்தில் இந்த பூஜை நடத்தப்படும் என கங்கோத்ரி நாராயண சுவாமிகள் தெரிவித்தார்.

    சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து காவடிபூஜை நடத்தப்பட்டு, கோபூஜை நடைபெற்றது. பின்னர் மழைவேண்டி அகமர்ஷண மந்திரங்கள், யஜூர் வேதம் ஓதப்பட்டது. பூஜைகளில் முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள், சிவக்குமார், அரக்கோணம் செüந்தர்ராஜ், ஆடிட்டர் அனந்தசுப்ரமண்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai