Enable Javscript for better performance
தண்ணீருக்காக போராடும் பொதுமக்கள்இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவார்களா? ஆ. நங்கையார்மணி- Dinamani

சுடச்சுட

  

  தண்ணீருக்காக போராடும் பொதுமக்கள்இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவார்களா? ஆ. நங்கையார்மணி

  By திண்டுக்கல்  |   Published on : 04th May 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தண்ணீர் பிரச்னைக்காக போராடும் மக்கள், இயற்கையை பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக பருவ மழை பொய்த்துவிட்டதால், விவசாயம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

  மழை பெய்ய வேண்டி மத வேறுபாடுகளை கடந்து, கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் மழை சோறு எடுத்தல், கழுதைகளுக்கு திருமணம் மற்றும் தவளை திருமணம் போன்ற வினோத சடங்குகளையும் மக்கள் நடத்தி வருகின்றனர். மழை பெறுவதற்காக வரம் கேட்டு, இறை வழிபாடு நடத்துவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

  இறைவனிடம் வரம் கேட்கும் முன், இறைவனின் வடிவத்தில் உள்ள இயற்கைக்கு நாம் செய்துள்ள இடையூறுகள் குறித்து கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது வந்துவிட்டது. கண்ணெதிரே காடுகள் அழிக்கப்பட்ட போதும், ஆறுகள் மற்றும் குளங்களில் மணல் கொள்ளை நடந்தபோதும் நாம் மௌனிகளாக இருந்துவிட்டோம்.

  குடிநீர் முதல் இருப்பிடம் வரை அரசின் சலுகைகளையும், உதவியையும் எதிர்பார்க்கும் நாம், அரசாங்கத்தின் அறிவிப்புகளை செயல்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற அரசின் உத்தரவை செயல்படுத்தியவர்கள் வெகு சிலர் மட்டுமே.

  தண்ணீர் பிரச்னைக்காக அரசு அலுவலகங்களின் முன்பும், சாலைகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், காடுகளை அழிக்கும் கும்பலையும், மணல் கொள்ளையர்களையும் தடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்கிறார் இயற்கை ஆர்வலர் எஸ்.சண்முகசுந்தரம்.

  வீட்டு முற்றத்தில் நிழல் தரும் மரங்களையும், கனி தரும் செடிகளையும், மலர் தரும் கொடிகளையும் வளர்த்து வந்த தமிழ் சமூகம், இன்று நகரங்கள் மட்டுமின்றி ஊரக பகுதியிலும் கூட செடிகளை சுவர் ஓவியமாக வரைந்து பரவசம் அடையும் நிலைக்கு மாறிவிட்டது. இதே நிலைதான் காடுகளுக்கும் ஏற்பட்டு வருகிறது. தமிழக பரப்பளவில் 33 சதவீதம் இருக்க வேண்டிய காடுகள், தற்போது 19 சதவீதம் மட்டுமே உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  இதன் எதிரொலிதான் பருவ மழை பொய்த்தமைக்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நம்பிக்கையின் அடிப்படையிலான சடங்குகளுக்கு இனி விடை கொடுத்துவிட்டு, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  தண்ணீர் பிரச்னையில் அரசாங்கத்தின் மீது மட்டுமே குறை கூறுவதை தவிர்த்துவிட்டு, மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவதற்கான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

  இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் எஸ்.பெருமாள்சாமி கூறியது:

  மலை உச்சிகளில் வளரும் மரங்கள் ஏற்படுத்தும் குளுமையால், தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் மேகங்கள் மழையை பொழிந்து விடும். இன்று மலை உச்சிகள் அனைத்தும் மொட்டைப் பாறையாக காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

  தமிழக நீராதாரம் மழையை மட்டுமே நம்பியுள்ளது. ஆண்டு முழுவதும் சுரந்துகொண்டிருக்கும் நீரூற்றுகள் மிகுவும் குறைவு. அதனால் மழை பொழிவை அதிகம் பெற அழிந்த மரங்களையும், தோப்புகளையும், காடுகளையும் மீண்டும் உருவாக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai