Enable Javscript for better performance
திண்டுக்கல், கொடைக்கானலில் கன மழை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதில், சாலை முழுவதும் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்தபடி சென்றுனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை திண்டுக்கலில் கன மழை பெய்த்ததால் நகரில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் ஓடியது. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளான சின்னாளப்பட்டி, வடமதுரை, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களிலும் கன மழை பெய்தது.

    இந்த மழையால் திண்டுக்கல் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் சூழ்ந்திருந்த சாலைகளில் வாகன ஒட்டிகள் மகிழ்ச்சியுடன் தண்ணீருக்கும் வாகனங்களை ஒட்டிச்சென்றனர்.

    கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வாகன நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர்.

    கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் இருந்தது. மேலும் சீசன் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சிறிது நேரம் மட்டும் சாரல் மழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது. குளுமையான சீதோஷ்ண நிலையும் இருந்து வந்தது.

    இந்நிலையில் பிற்பகலில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகனங்கள் நிறுத்த இடமின்றி காணப்பட்டது. மேலும் கேபிள் பதிக்கும் பணிக்காக சாலைகளின் இருபுறங்களில் தோண்டி வைத்துள்ள பள்ளங்களாலும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், அமைதிப் பள்ளத்தாக்கு, ஃபைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டதாலும் மழையால் சேறும், சகதியுமாக இருந்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன.

    கொடைக்கானலில் பெய்த மழையால் வற்றியிருந்த நீரோடைகளில் சிறிதளவு தண்ணீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது பெய்துள்ள மழை பிளம்ஸ், பீச்சஸ் பழங்கள் விளைவதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் புறநகர்ப் பகுதிகளில் சிறிதளவு குடிநீர் தட்டுப்பாடு குறையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai