Enable Javscript for better performance
பழனி தீயணைப்புப்படைக்கு சிறிய ரக தீயணைப்பு வாகனம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய சிறிய ரக தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    பழனி- திண்டுக்கல் சாலையில் தீயணைப்புப்படை மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9 ஆயிரம் லிட்டர் அளவுள்ள நீர்தாங்கி வாகனமும், 4,500 லிட்டர் அளவுள்ள நீர் மற்றும் தீயணைப்பு வாகனமும் பயன்பாட்டில் உள்ளன. இதைக் கொண்டு பழனி நகர் மற்றும் கிராமங்கள் மற்றும் கொடைக்கானல் சாலையில் நடைபெறும் அசம்பாவிதங்களின்போது மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர சிறிய அளவிலான பேட்ச்சர் எனப்படும் தீயணைப்பு இயந்திரம் திருவிழாக்காலங்களின்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழனி தமிழகத்தின் முதன்மைக் கோயில் நகராகவும், கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள நகராகவும் உள்ளது. இதனால் பழனிக்கு கூடுதல் வாகனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான சிறிய ரக தீயணைப்பு வாகனம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் கூறியதாவது: இந்த வாகனம் மினி வாட்டர் டெண்டர் மற்றும் போம் மிக்ஸ் இயந்திரம் ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பழனிக்கு மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப்பணி நிதி ஒதுக்கீடு உயர் அதிகாரிகளின் முயற்சி மூலம் வரப்பெற்றுள்ளது. இந்த வாகனத்தில் எண்ணெய் அதிகமான இடங்களில் தீயணைப்பு பணி மேற்கொள்ள போம் மிக்சிங் தானியங்கியாக கலக்கும் வகையில் இயந்திரம் உள்ளது. மிகக்குறுகிய இடங்களில் இந்த வாகனத்தை எளிதாக கொண்டு செல்வதன் மூலமாக அசம்பாவிதம் ஏற்படும் பகுதியை விரைவாக சென்றடைய முடியும். பெரிய தண்ணீர் வாகனத்தில் உள்ள தண்ணீரை இந்த இயந்திரத்துக்கு இணைக்கவும் வசதி உள்ளது. வாகனத்தில் கூடுதல் இருக்கைகள், விளக்குகள், சைரன்கள் உள்ளிட்டவை விரைவில் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai