பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
By பழனி, | Published on : 04th May 2014 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்படிவங்கள் விநியோகம் சனிக்கிழமை துவங்கியது.
தமிழக அரசு பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை சனிக்கிழமை முதல் வழங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கி வருகிறது. பழனியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணியை பழனிக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். காலை முதலே ஏராளமான மாணவர்கள் வந்திருந்து விண்ணப்பங்களை பெற்றனர். முதல்நாளில் சுமார் 750 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுச் சென்றனர். முதல்வர் கந்தசாமி கூறுகையில், விண்ணப்பம் வழங்கும் பணி இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பவும் கடைசி நாள் மே 20 ஆகும். விடுமுறை நாட்களில் விண்ணப்பம் விற்பனை இருக்காது என தெரிவித்தார். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் ஜாதிச்சான்று நகலுடன் வந்தால் ரூ.250க்கு விண்ணப்பம் சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி அலுவலர்கள் புஷ்பலதா, தனலட்சுமி, வெங்கடேஷ்வரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.