Enable Javscript for better performance
தண்ணீர் கொண்டுவரும் குழாயில் பழுது தினமும் வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் கொண்டுவரும் குழாயில் பழுது தினமும் வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர்

    By பழனி,  |   Published on : 05th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் குழாய் பழுது சரி செய்யப்படாததால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது.

    கோயில் நகரான பழனிக்கு கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு அணை மூலமாக தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பழனியின் கிழக்குப் பகுதிக்கு லட்சுமிபுரம், சிவகிரிப்பட்டி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் மூலமாகவும், மேற்கு பகுதிக்கு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தாலுகா அலுவலகங்களில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் பாலாறு அணை அல்லது கோடைகால நீர்த்தேக்கம் இவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் அனைத்து பகுதிக்கும் வினியோகிக்க, குளத்து பைபாஸ் ரவுண்டானா பகுதியில் இரும்பு குழாய்கள் மூலம் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது கோடைகால நீர்த்தேக்கம் வறண்டுவிட்ட நிலையில் பாலாறு அணையில் உள்ள தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றி வார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 4 நாள்களுக்கு ஒருமுறை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தாலும் 10 நாள்களுக்கு ஒருமுறையே குழாய்களில் குடிநீர் வழங்கப்படுகிறது.

    தண்ணீர் மற்றும் தொட்டிகளை நகராட்சி வழங்கி லாரி வாடகையாக மட்டும் சுமார் ரூ.15 லட்சம் செலவழிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    பாலாற்றில் இருந்து பழனிக்கு தண்ணீர் வரும் பாலசமுத்திரம் உள்ளிட்ட பல வழியிலும் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சில இடங்களில் குடிநீர்குழாய் உடைக்கப்பட்டு தண்ணீர் விவசாயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பழனியில் நகராட்சி மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் செல்லும் வழியில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. பழனி புதுதாராபுரம் சாலையில் தீயணைப்பு நிலையம், நகர காவல் நிலையம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் ஆகியவற்றின் முன்பு குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது. பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்கு புகாராக செய்தும் நடவடிக்கை இல்லையாம்.

    அதே போல திண்டுக்கல் சாலையில் சிவகிரிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் உடைப்பு, கல்லூரி காம்பவுண்டு சுவர் முன் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது.

    இதுகுறித்து நகராட்சி பொறியாளர்களிடம் கூறினால் யாரும் கண்டுகொள்வதில்லை என கூறுகின்றனர். பொதுமக்களிடமும், கவுன்சிலர்களிடமும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதை சரிசெய்ய இயலாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    உடைப்பு ஏற்படும் இடத்தில் குழாய் போன்ற அமைப்பு இருந்தால் தண்ணீர் வீணாகாமல் பொதுமக்களாவது பிடித்து செல்வார்கள். இதற்காவது நகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    வரும் தண்ணீர் முழுமையாக வந்தடையாததால், பழனியில் தற்போது செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் குறை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai