Enable Javscript for better performance
தன்னார்வ பயிலும் வட்ட புத்தகங்கள் போட்டித் தேர்வர்களுக்கு பயன் அளிக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    தன்னார்வ பயிலும் வட்ட புத்தகங்கள் போட்டித் தேர்வர்களுக்கு பயன் அளிக்குமா?

    By திண்டுக்கல்  |   Published on : 05th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போட்டித் தேர்வுக்கு தயார் செய்வோருக்கு உதவும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள், பயன்பாடின்றி பாழாகும் நிலையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    தமிழக அரசின் சார்பில் பல்வேறு பணியாளர்களை தேர்வு செய்யவும், வங்கிகள் சார்பில் பல்வேறு நிலையில் உள்ள பணியார்களைத் தேர்வு செய்யவும், தொடர்ச்சியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிவிக்கை வெளியாகும் ஒவ்வொரு தேர்வுக்கும் லட்சகணக்கானோர் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

    தேர்வுக்கு தயார் செய்வோருக்கு உதவியாக தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து, அந்த மையத்தில் சேர்ந்தாலே வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்படுத்தப்படுகிறது. எந்த மையத்தில் சேர்ந்தாலும், படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பலர் மறந்து விடுகின்றனர்.

    தனியார் பயிற்சி மையங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தால், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வசதியற்றோரின் எண்ணிக்கை குறைவது கண்டறியப்பட்டது. இதனை தவிர்க்கும் விதமாக அரசின் சார்பில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தன்னார்வ பயிலும் வட்டம் துவக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தன்னார்வ பயிலும் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிலும் வட்டத்தின் சார்பில், டிஎன்பிஎஸ்சி தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கித் தேர்வு போன்றவற்றிக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு தேர்வுக்கும், 2 மாத காலம் வழங்கப்படும் இந்த பயிற்சி, முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. கடந்த தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணி கிடைத்தவர்களே பெரும்பாலும் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்றுநர்களுக்கு ஊதியமாக ரூ.100 மட்டுமே அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. ஊதியத்தை பெரிதாக நினைக்காமல், சேவை மனபான்மை கொண்ட தன்னார்வலர்கள் சிலர், போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

    தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளின் நிலை இவ்வாறு இருக்க, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிலும் வட்டத்தின் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் விலையுர்ந்த புத்தகங்கள் பயன்பாடின்றி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த புத்தகங்களை வாசிப்பதற்கு யாரும் வருவதில்லை என்கிறார் தன்னார்வ பயிலும் வட்ட அலுவலர் ஒருவர். ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதே பலருக்கு தெரியாது.

    புத்தகங்கள் இருக்கும் பீரோ எப்போதும் பூட்டியே இருப்பதால், யாரும் பயன்படுத்த முடியவில்லை என்கிறார் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த கே.ராஜேந்திரன்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தன்னார்வ பயிலும் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவே புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இங்குள்ள புத்தகங்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைப் போன்ற நிலையில் தான் உள்ளன.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக போட்டித் தேர்வர்களுக்கு தெரிவதில்லை. புத்தகம் வழங்கிய பின், வாசிக்க வருவோரின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட இளைஞர் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் யாரும் கண்காணிப்பதில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான விழிப்புணர்வை போட்டித் தேர்வர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    குறிப்பாக இளைஞர் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு வருவோரிடம் முதல் கட்டமாக இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். வாசிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், புத்தக பராமரிப்பு பணிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவரிடம் ஒப்படைக்க வழி ஏற்படும். தற்போதைய நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு யாரும் புத்தகம் வாசிக்க வருவதில்லை. அதனால் புத்தகங்களும் பீரோவில் பூட்டிய நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

    வசதி வாய்ப்பற்றவர்களும் போட்டித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசின் சார்பில் அதிக பொருள் செலவில் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதனை பயனாளிகள் உபயோகப்படுத்தும் வாய்ப்பினை, இளைஞர் வேலைவாய்ப்புத்துறை வழங்க வேண்டும் என்பதே போட்டித் தேர்வர்களின் எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai