Enable Javscript for better performance
திண்டுக்கல் அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்

    By திண்டுக்கல்,  |   Published on : 05th May 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மலை அடிவார கிராம தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து வாழை, தென்னந்தோப்புகளை சேதப்படுத்தின. பொதுமக்கள் அவற்றை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே காமராஜர் அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனவிலங்குகள் குடிநீருக்காக அடிக்கடி இரவு நேரங்களில், காமராஜர் அணைக்கு வந்து செல்வது வழக்கம்.

    மலைப்பன்றி, மான், காட்டு மாடு உள்ளிட்டவைகள் மட்டுமே இதுவரை அணைப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் குடிக்க வந்து சென்றன.

    தற்போது கடும் வறட்சி காரணமாக யானைகளும் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. சனிக்கிழமை இரவு ஐந்து யானைகள் கூட்டமாக, மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி, மலை அடிவாரத்தில் உள்ள மல்லையாபுரம், அக்கரைப்பட்டி கிராம பகுதிக்கு வந்துள்ளன. மூன்று யானைகள் ஒரு பிரிவாக, அக்கரைப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் வளாகத்தில் படுத்துள்ளன, அதிகாலையில் ஊர் மக்கள் யானைகளைப் பார்த்துள்ளனர். வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியவுடன், யானைகள் வாழை தோட்டம் வழியாக, இரும்பு கம்பி வேலியை உடைத்து, சேதப்படுத்திவிட்டு மல்லையாபுரம் கடந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஓடிவிட்டன. இதில் இரும்பு கம்பிகளை உடைத்ததில் ஒரு யானைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் காயமடைந்த யானை முன்னால் செல்லவிட்டு, மற்ற இரண்டு யானைகள் அதன் பின்னால் சென்றதாக பார்த்தவர்கள் கூறினர்.

    மற்ற இரண்டு யானைகள் அக்கரைப்பட்டி அர்ச்சுணன் முத்தையா என்பவரது, நெல்லித் தோட்டத்தில் பதுங்கி கொண்டன. யானை இருப்பது தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காளிமுத்து என்பவர் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது, இரண்டு யானைகள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் கூச்சல் போடவும், தோட்டத்தில் இருந்த மூர்த்தி, சிங்கராஜ், கோபால் ஆகியோரும் வந்தனர்.

    இரண்டு யானைகளும் அவர்களை எதிர்த்து நின்றுள்ளன. அச்சமடைந்த அவர்கள் கூச்சல் போடவும், யானைகள் அங்கியிருந்து வேகமாக சென்றுள்ளன. தென்னந்தோப்பு, வாழை தோட்டங்களை சேதப்படுத்தியபடி, எஸ்.பாறைப்பட்டி அருகே உள்ள ஆர்.வி.எஸ். தோட்டத்திற்கு யானைகள் சென்றன. பின்னர், காட்டு பகுதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஓடின.

    அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் பகுதியில் யானைகளைப் பார்த்த கிராம மக்கள் மற்றும், தோட்டத்து வீடுகளில் தங்கியுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யானைகள் கூட்டம் மீண்டும் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai