Enable Javscript for better performance
நத்தம் பகுதியில் இலவம் பஞ்சு பறிப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் பகுதியில் இலவம் பஞ்சு பறிப்பு தொடங்கியுள்ளது. வறட்சி காரணமாக விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.

    நத்தம் பகுதியில் மானாவாரியாக பலன் தரும் மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இலவம் பஞ்சு மரம் கரந்தமலை, மணக்காட்டூர், உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வத்திபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மலைப் பகுதி மற்றும் அதைச்சார்ந்த பகுதிகளிலும், நீரூற்று ஓடைப்பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் ஆண்டில் ஒருமுறை மட்டும் மகசூல் தரும் தன்மை பெற்றவை. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இலவ நெத்துக்கள் பறிக்கப்படும். தற்போது பறிப்புப் பணி நடைபெறுகிறது.

    ஒரு இலவ நெத்து 70 பைசாவிலிருந்து ரூ.1 வரை தரத்துக்கு ஏற்ப விலை போகிறது. கடந்த ஆண்டு ஒரு நெத்து 60 பைசாவிலிருந்து 80 பைசா வரை விற்றது. கடும் வறட்சியை தாங்கும் மரமாக இருந்த போதிலும் மழை இல்லாமல் போனதால் மகசூல் பாதியாக குறைந்து விட்டது.

    இது குறித்து நத்தம் விவசாயி அழகர்சாமி கூறியதாவது: நத்தம் பகுதி இலவம் பஞ்சு அதிக திடமானது. இந்த பஞ்சால் தயாரிக்கப்படும் மெத்தைகள், தலையணைகள் தரமாக இருக்கும். நிம்மதியான உறக்கத்தைத் தரும். கடைகளில் இலவம் பஞ்சு தயாரிப்பு பொருள்களுக்கான வரவேற்பு எப்போதும் உண்டு.

    இலவ நெத்துக்கள் பறிப்பதற்கு கூலி ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அனுபவம் உள்ளவர்களே இந்த மரத்தில் ஏறி இறங்க முடியும். காலப் போக்கில் இலவம் பஞ்சு நெத்து அறுவடைக்கு கூலியாள்கள் அறவே குறைந்து விடும் நிலையில் உள்ளது. விலை அதிகரித்து விற்கப்பட்டாலும் விளைச்சல் பாதியாகியுள்ளது. இந்த ஆண்டு இலவ விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai