Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை கணக்கெடுக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை கணக்கெடுக்க உத்தரவு

    By திண்டுக்கல்  |   Published on : 06th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அனைத்து பகுதியிலும் உள்ள நீர் ஆதாரங்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மா.பொ.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தது:

    குறிப்பிட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர், அந்தந்த பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் கிடைத்ததா என்பதை உள்ளாட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

    மேலும் அந்தந்த பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் குறித்தும், மக்கள் தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் குறித்தும் ஊராட்சி மற்றும் வட்டார அளவில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சில பகுதிகளில் காலை, மாலை என இரு வேளைகளிலும் தண்ணீர் விநியோகம் நடப்பதாக தெரிய வந்துள்ளது. அதே பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள பெரும்பாலானோருக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை.

    தேவைக்கு அதிகமாக குறிப்பிட்ட பகுதிகளுக்கே தண்ணீர் வழங்குவதை முறைப்படுத்தி, தண்ணீர் கிடைக்காத பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒருவேளை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொது நிதி, சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி ஏற்கனவே நீர் ஆதாரங்கள் ஏற்படுத்திய பகுதிகளில் புதிய திட்டங்கள் தொடங்க கூடாது.

    அனைத்து மக்களுக்கும் குடிநீர் தடையின்றி கிடைப்பதற்கு, ஊராட்சி மற்றும் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள நீர் ஆதாரங்கள்(ஆழ்துளை கிணறு, கை அடிபம்பு, சிறு மின்விசை குழாய், கிணறுகள் உள்ளிட்டவை) குறித்து 4 நாள்களுக்குள்(மே 9) கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த பணிகளில் ஊராட்சி செயலர்களை பயன்படுத்தாமல், வட்டார வளர்ச்சி அலுவலர்களே முழுமையாக ஈடுபட வேண்டும். அதன் மூலம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால், பொதுமக்கள் நடத்தும் சாலை மறியல், அலுவலக முற்றுகை போன்ற போராட்டங்களை தவிர்க்க முடியும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai