"சிறந்த துறைகளை தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை'
By dn | Published on : 07th May 2014 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிறந்த துறைகளையும், நல்ல கல்வி நிறுவனங்களையும் தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என, பயிற்சி முகாம் நிறைவு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக நடைபெறும் கோடை கால இலவச கணினி பயிற்சி முகாம், ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கியது. 10 நாள்கள் நடத்தப்பட்ட இந்த முகாமில், பத்தாம் வகுப்பு முடித்த 50 கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, திங்கள்கிழமை (மே 5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கே. மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் எம். நரசிங்க சக்தி, பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியது:
கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு கல்வி அவசியம். அதிலும் குறிப்பாக, தொழில்நுட்ப கல்வி பயின்று, தங்கள் திறமைகளின் மூலம் அதிக வேலைவாய்ப்பினை பெறமுடியும். வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கக் கூடிய சிறந்த துறையை தேர்வு செய்வது போல், நல்ல கல்வி நிறுவனங்களையும் சிந்தித்து தேர்வு செய்ய வேண்டும்.
போலியான விளம்பரங்கள் மூலம் கல்வித் துறையிலும், வேலைவாய்ப்புத் துறையிலும் ஏமாறாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நல்ல ஆசிரியர்களின் உதவியோடும், வழிகாட்டுதலோடும் மாணவர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்றார் அவர்.
முன்னதாக பேசிய கல்லூரி முதல்வர் கே. மணிவண்ணன், கணினியின் பயன்பாடு குறித்தும், அதனை முறையாக கற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், கணிப்பொறிகளை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வகுப்பறைக் கல்வியோடு, ஆய்வகப் பயிற்சியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் முடிவில், மின்னஞ்சல் குறித்து விளக்கம் அளித்ததோடு, அவர்களுக்கு தனித்தனியே மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கித் தரப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாக அலுவலர் எம். திருப்பதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் எஸ். மாரிமுத்து, எஸ். கீர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.