பழனி அருகே 100 பவுன் கொள்ளை
Published on : 07th May 2014 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி அருகே கணவன், மனைவியை கட்டிப்போட்டு, 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.35,000 ரொக்கத்தை முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.
தாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). திமுக பிரமுகரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தாளையத்தில் ஆட்டோ பைனான்ஸýம் நடத்தி வருகிறார். தனது தோட்டத்தில் பங்களா கட்டி அங்கேயே வசித்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் கார்த்திகேயனின் மகள்கள் 2 பேரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், கார்த்திகேயனும், இந்திராணியும் வெளியில் சென்று விட்டு திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் காரில் வீடு திரும்பியுள்ளனர். காரை விட்டு இறங்கியவுடன், இருட்டில் மறைந்திருந்த 2 மர்ம நபர்கள், கையில் கத்தியுடன் அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மேலும் 5 பேர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
இவர்கள் கார்த்திகேயனையும், அவரது மனைவி இந்திராணியையும் சேலையால் கையின் பின்புறத்தைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து, செல்போன்களையும் பறித்துக் கொண்டனராம். வீட்டில் இருந்த சுமார் 100 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.35 ஆயிரத்தை திருடிய பிறகு, வீட்டை வெளியே பூட்டிவிட்டு, கார்த்திகேயனின் காரிலேயே திருடிய பொருள்களுடன் தப்பி விட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கைக் கட்டை அவிழ்த்த கார்த்திகேயன், இதுகுறித்து சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, கொள்ளையர்கள் தப்பிச் சென்ற கார்த்திகேயனின் கார், பழனி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று நின்றிருப்பது தெரியவந்தது. போலீஸார் அந்த வாகனத்தைக் கைப்பற்றி, பழனி டவுன் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகேயன் பைனான்ஸ் நடத்தி வருவதால், பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது முன்விரோதம் காரணமாக இச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.