Enable Javscript for better performance
முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: பழனி அருகே கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 100 பவுன் நகை,  ரூ.35 ஆயிரம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: பழனி அருகே கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 100 பவுன் நகை,  ரூ.35 ஆயிரம் கொள்ளை

    Published on : 07th May 2014 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் கணவன், மனைவியை கட்டிப்போட்டு, 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.

       தாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40).  திமுக பிரமுகரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (35). இவர்களுக்கு நிவந்திதா (13), அனுந்திதா (10) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

       கார்த்திகேயன், தாளையத்தில் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பங்களா கட்டி அங்கேயே வசித்து வருகிறார்.

      கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கார்த்திகேயனின் இரு மகள்களும் உறவினர் வீட்டுக்கு வெளியூர் சென்றிருந்தனர்.

      இந்த நிலையில், கார்த்திகேயனும், இந்திராணியும் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டுக்கு காரில் வந்துள்ளனர். காரை விட்டு இறங்கியவுடன், இருட்டில் மறைந்திருந்த இரு மர்ம நபர்கள், கையில் கத்தியுடன் அவர்களை வீட்டுக்குள் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மேலும் 5 பேர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

      இந்த மர்ம நபர்கள் அனைவரும் முகமூடியுடன் குல்லாவும் அணிந்திருந்தனராம்.  கையுறை அணிந்திருந்த இவர்கள், கத்தி முனையில் இந்திராணியையும், கார்த்திகேயனையும் சேலையால் கையின் பின்புறத்தைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். செல்போன்களையும் பறித்துள்ளனர்.

      பின்னர், வீட்டில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை திருடிவிட்டு, இந்திராணி அணிந்திருந்த நகைகளையும் கழட்டுமாறு கூறியுள்ளனர். அவர் சுமார் 5 பவுன் மதிப்புள்ள தாலிக்கொடியை கழற்ற முயன்றபோது, திருடர்கள் வேண்டாம் எனத் தெரிவித்து விட்டனராம்.

       திருடர்கள் தங்களுக்குள் சைகையாலேயே தகவல்களை பரிமாறியுள்ளனர். சுமார் 100 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 35 ஆயிரத்தை திருடிய பிறகு, வீட்டை வெளியே பூட்டிவிட்டு, கார்த்திகேயனின் காரிலேயே திருடிய பொருள்களுடன் தப்பி விட்டனர்.

      சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கைக் கட்டை அவிழ்த்த கார்த்திகேயன், இதுகுறித்து சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

      சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், ஆய்வாளர்கள் புகழேந்தி, சேகர் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் வந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வந்த தடயவியல் டி.எஸ்.பி. செல்வராஜ் தாமஸ் தலைமையிலான குழுவினர் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் லிண்டோ வரவழைக்கப்பட்டது.

      இதனிடையே, கொள்ளையர்கள் தப்பிச் சென்ற கார்த்திகேயனின் கார், பழனி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று நின்றிருப்பது தெரியவந்தது. போலீஸார் அந்த வாகனத்தைக் கைப்பற்றி, பழனி டவுன் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.   சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கார்த்திகேயன் பைனான்ஸ் நடத்தி வருவதால், பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது முன்விரோதம் காரணமாக இச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai