Enable Javscript for better performance
கொடைக்கானலில் கனமழை: பல இடங்களில் மண் சரிவு - Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் கனமழை: பல இடங்களில் மண் சரிவு

    By கொடைக்கானல்,  |   Published on : 08th May 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் தொடர்ந்து மேகமூட்டமும் காற்றுடன் பரவலாக கனமழையும் பெய்து வருவதால், மலைச் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் சமீபத்தில் சீசன் தொடங்கியது. எனவே, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் பகல் நேரங்களில் சாரலும், மாலை வேளையில் லேசான மழையும் பெய்ததால், சூழ்நிலை மாறி குளுமை நிலவியது. இதை, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.

    இதில், கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் அதிகபட்சமாக 18 டிகிரியும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸýம் நிலவியது. 60 முதல் 70 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை 60.6 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால், அதிகமாக குளிர் நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் சற்று குறைந்துள்ளது.

    மேகமூட்டமும், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், மலைச் சாலைகளில் மச்சூர், வாழைகிரி, லாஸ்காட் சாலை, உகார்த்தே நகர், பெருமாள்மலை, டம்டம் பாறை பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவும், மரக் கிளைகளும் விழுந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் சற்று சிரமப்பட்டனர். மேலும், நகரின் பல இடங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானல் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை குறைவதற்கு வாய்ப்புள்ளது. விவசாயத்துக்கு ஏற்ற மழையாகவும் இருந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மேலும், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மலைச் சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் கற்களையும், சிறு சிறு மரக் கிளைகளையும், சாலை ஓரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் அகற்றி சீர்செய்தால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாது. நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai