Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை- Dinamani

சுடச்சுட

    

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக, கடந்த 2 நாள்களாக தென் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 356 மில்லி மீட்டர் கிடைத்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பமான சூழ்நிலை, கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் மாற்றம் அடைந்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழையும், கொடைக்கானல் மற்றும் சிறுமலை உள்ளிட்ட வனப் பகுதிகளில் பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.

    இரவு முழுவதும் பெய்த தூறல் மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    தொடர்ந்து, புதன்கிழமையும் காலை முதலே மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விட்டு விட்டு பலத்த மழை கொட்டத் தொடங்கியது. காற்று இல்லாததால், அந்தந்த பகுதியில் திரண்ட கருமேகம் கலையாமல், மழை நீராகப் பொழிந்தது. மேலும், இடி, மின்னல் இல்லாததால், சேதங்கள் ஏதும் தெரிய வரவில்லை.

    மாவட்டத்தில் மிகுந்த வறட்சிப் பகுதியான குஜிலியம்பாறை ஒன்றியத்தில், நண்பகல் நேரத்தில் பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகள், சாலைகள் மற்றும் நீரோடைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    திண்டுக்கல்-கரூர் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பலத்த மழை பெய்ததால், வாகனங்கள் விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றன.

    புதன்கிழமை காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): திண்டுக்கல் - 28.80, கொடைக்கானல் - 60.60, நத்தம் - 45.50, நிலக்கோட்டை - 28.40, பழனி - 36.00, வேடசந்தூர் - 18.84, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) - 52.70, புகையிலை நிலையம் (வேடசந்தூர்) - 20.02, கொடைக்கானல் போட் கிளப் - 60, காமாட்சிபுரம் - 18.70. மொத்தம் 369.56 மி.மீட்டர் பதிவாகியுள்ள மழையின் சராசரி - 36.96.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai