Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டுக்குத் தடை பழனி அருகே கிராமத்தில் கருப்புக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டுக்குத் தடை பழனி அருகே கிராமத்தில் கருப்புக் கொடி

    By பழனி,  |   Published on : 09th May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, பழனி அருகேயுள்ள கிராமத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

    தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது. இதைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் தமிழகத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கோர்ட் காளியம்மன் திருக்கோயில் சுமார் 100 ஆண்டு பழமையானது. இங்கு, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, நெய்க்காரப்பட்டியில் ஏராளமான வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

    இக் கிராமத்தில் ஏராளமான மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களும் உள்ளனர். மேலும், இந்த விளையாட்டை நடத்தும் விழாக் கமிட்டியினரும் உள்ளனர். இவர்களுடன், விவசாயிகளும் சேர்ந்து கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றியிருந்தனர்.

    இதுகுறித்து, கிராம மக்கள் தெரிவிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அடிக்கடி பிரச்னையில் சிக்கி வருகிறது. விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், வேண்டுமென்றே சில அமைப்புகள் பிரச்னையைக் கிளப்புகின்றன. இதை கண்டித்தே நாங்கள் கருப்புக் கொடி ஏற்றியுள்ளோம். இதுகுறித்து சட்ட ரீதியாக எங்களது எதிர்ப்பைக் காட்டுவோம். அரசும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai