தண்டவாளத்தில் பாறாங்கல்: கோவை ரயில் தாமதம்
By திண்டுக்கல் | Published on : 09th May 2014 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தண்டவாளத்தில் பாறாங்கல் கிடந்ததால், கோவை செல்லும் பயணிகள் ரயில், திண்டுக்கல் நிலையத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவிலில் இருந்து கோவை வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரயில், வியாழக்கிழமை பிற்பகலில் கொடைரோடு நிலையத்தை கடந்து அம்பாத்துரை நோக்கிச் சென்றது.
அப்போது, பலத்த மழை பெய்துள்ளது. அம்பாத்துரை ரயில் நிலையத்துக்கு முன்னதாக பாறைகளுக்கு இடையிலான பாதையில் ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் பாறாங் கல் உருண்டு கிடப்பதை கவனித்த ஓட்டுநர், உடனே ரயிலை நிறுத்தினார். அந்தக் கல் அகற்றப்பட்டு, சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னரே மீண்டும் திண்டுக்கல் நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்றது.
வழக்கமாக, திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு கோவை புறப்பட்டுச் செல்லும் இந்த ரயில், வியாழக்கிழமை சுமார் 1 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் 3.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவு: தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொடைரோடு-அம்பாத்துரை இடையே பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.