Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் குற்றச் சம்பவங்கள்: பழைய குற்றவாளிகள் 20 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் குற்றச் சம்பவங்கள்: பழைய குற்றவாளிகள் 20 பேர் கைது

    By திண்டுக்கல்  |   Published on : 09th May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில், பழைய குற்றவாளிகள் 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 30 நாள்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கொள்ளைச் சம்பவங்கள் திண்டுக்கல், பழனி போன்ற நகர் பகுதிகளைச் சுற்றியே நடைபெற்று வந்துள்ளன. அதேபோல், மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கொலைகளில் பெரும்பாலானவை பழிக்குப் பழியாக நடந்த சம்பவங்களாக உள்ளன.

    இதில், செம்பட்டி அடுத்துள்ள ஆத்தூர் நீக்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில், இளம்பெண் மற்றும் சிறுவன் என இருவர் கொலை சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. இதில், இறந்தவர்கள் குறித்த விவரங்களோ, கொலையாளிகள் தொடர்பான தகவல்களோ இதுவரை கண்டறியப்படவில்லை.

    இந்த நிலையில், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக பழைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரன் உத்தரவிட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சீனிவாசன் மற்றும் பாத்திமாதேவி ஆகியோர் தலைமையில், புதன்கிழமை (மே 7), மாவட்டத்தில் உள்ள 7 உள்கோட்டங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வாகனத் தணிக்கை, தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், பழைய குற்றவாளிகள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், ஏற்கெனவே நடைபெற்றுள்ள சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பதைக் கண்டறியவும், பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்துவதோடு, கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai