Enable Javscript for better performance
பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    By கொடைக்கானல்  |   Published on : 09th May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஏரிச்சாலை, சீனிவாசபுரம், அப்சர்வேட்டரி, வில்பட்டி, நாயுடுபுரம், புதுக்காடு, பெருமாள்மலை உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பம் சேதமடைந்து, மின்தடை ஏற்பட்டது.

    தொடர்ந்து, அட்டுவம்பட்டி கிரஸ், லாஸ்காட் சாலை, பி.டி.சாலை ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கிரஸ் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டுமென, அப் பகுதி மக்கள் வட்டாட்சியர் மாணிக்க கிருஷ்ணமூர்த்தியுடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால், அப் பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

    பி.டி. சாலையில் உள்ள பழமையான மரம் விழுந்ததில், அருகே இருந்த நூலகக் கட்டடத்துக்கும், தனியார் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்தவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    லாஸ்காட் சாலையில் மரம் விழுந்ததில், கொடைக்கானல்-மதுரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வனத்துறை ரேஞ்சர் சக்திவேல், நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரியத் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சுற்றுலா இடங்களிலும் மலைச் சாலைகளிலும் மரங்கள் விழுந்தன. இதனால், சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் பெரிதும் சிரமப்பட்டன.

    கடந்த மூன்று நாள்களாக, கொய்யாப்பாறை, அடுக்கம், பாலமலை, அட்டக்கடி உள்ளிட்ட பல இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். நகர்ப் பகுதியிலும் பல மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai