Enable Javscript for better performance
இரட்டைக் கொலை வழக்கில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் நீர்த்தேக்கம் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், ஒரு மாதத்திற்கு பின் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள ஆத்தூர் நீர் தேக்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இளம் பெண் மற்றும் சிறுவனின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதுகுறித்து செம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னரும் கொலையாளிகள் குறித்தோ, கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்களோ தெரியாமல் இருந்து வந்தன.

    இந்த நிலையில் செம்பட்டி அடுத்துள்ள சேடபட்டியைச் சேர்ந்த செல்வா(எ) செல்வக்குமார்(24) என்பவரை, இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்தது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், செல்வா குடும்பத்தினருடன் திருப்பூர் சென்றுவிட்டார். அங்கு தனியார் நிறுவனத்தில் தையல் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அதே இடத்தில் வேலை செய்த ராதா(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குண்டம் பகுதியைச் சேர்ந்த ராதாவுக்கு ஏற்கனவே சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 2 குழந்தைகளும் இருந்துள்ளனர்.

    செல்வா மற்றும் ராதாவுக்கு இடையே ஏற்பட்ட பழக்கத்தால், சுரேஷ் தனியே பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் சேடப்பட்டியில் திருவிழா நடைபெறுவதாக கூறி செல்வா, ராதாவை அழைத்து வந்துள்ளார். ராதாவுடன் அவரது மகன் வசந்த்(6) என்பவரும் வந்துள்ளார்.

    அவர்களை ஆத்தூர் நீர் தேக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்ற செல்வா, தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் சிறுவன் வசந்தை ராதாவுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ராதாவை கொலை செய்த செல்வா, அடையாளம் தெரியாதபடி ராதாவின் முகத்தையும் சிதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதனிடையே ராதாவை தேடி அவரது தம்பி ஆனந்த், திருப்பூருக்கு சென்றுள்ளார். பின்னர் செம்பட்டி பகுதியில் நடந்த கொலை குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் செம்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரிக்க வந்த போது, ராதாவின் சடலத்தை கைப்பற்றிய போது கிடைத்த ஆடைகளை போலீஸார் காட்டியுள்ளனர்.

    அதன் மூலம் கொலை செய்யப்பட்டது ராதா என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனந்த் கொடுத்த தகவலின் பேரில் திருப்பூரில் தங்கியிருந்த செல்வா கைது செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai