Enable Javscript for better performance
பிளஸ்2 தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்2 தேர்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி

    By திண்டுக்கல்  |   Published on : 10th May 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 90.91 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை பிளஸ்2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களிலிருந்து தேர்வுக்கு விண்ணப்பித்த 21398 பேரில், 107 பேர் தேர்வு எழுதவில்லை.

    இந்த தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 21291 பேரில் 19355 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 91.91 சதவீதம். இதன் மூலம் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை காட்டிலும் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 5398 மாணவர்கள், 6914 மாணவிகள் என 12,312 பேரும், பழனி கல்வி மாவட்டத்தில் 3082 மாணவர்கள், 3961 மாணவிகள் என 7,043 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் கல்வி மாவட்ட தேர்ச்சி விகிதம் 91.23. பழனி கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.34.

    திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் விவரம்: திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.காயத்ரிதேவி 1187 மதிப்பெண்களுடன் முதலிடமும், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஜனனி 1185 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாணவி எம்.பிரியங்கா 1184 மதிப்பெண்களுடன் 3ஆவது இடமும் பெற்றனர்.

    100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்:

    பழனி, திண்டுக்கல் என 2 கல்வி மாவட்டங்களையும் உள்ளடக்கிய திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 164 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் பழனி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பள்ளிகளும், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன. அரசினர் மேல்நிலைப் பள்ளி நல்லமநாயக்கன்பட்டி, அரசினர் மேல்நிலைப் பள்ளி கே.புதுக்கோட்டை, அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி விளாம்பட்டி, அரசினர் மேல்நிலைப் பள்ளி செட்டியபட்டி ஆகிய 4 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    கடந்த 2013ஆம் ஆண்டு பிளஸ்2 பொதுத் தேர்வில், 2 அரசுப் பள்ளிகள் உள்பட 38 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சிப் பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai