Enable Javscript for better performance
சௌந்தரராஜப் பெருமாள் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 14இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சௌந்தரராஜப் பெருமாள் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 14இல் தொடக்கம்

    By திண்டுக்கல்,  |   Published on : 12th May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் விமர்சையாக நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 14) முதல் தொடங்குகிறது.

    மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை போன்று, திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலும் பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நிகழாண்டு திருவிழா, மே 14ஆம் தேதி தொடங்குகிறது. சுவாமி சன்னதியிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் அருள்மிகு சௌந்தராஜப் பெருமாள், கும்ப நதியில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது.

    அதன்பின்னர் பல்லக்கில் புறப்பாடாகி திண்டுக்கல் நகரில் வலம் வந்து, அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு எதிர் சேவை புரிகிறார். 5 நாள்கள் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி வீதியுலாவை முன்னிட்டு கீழரதவீதி வெள்ளை விநாயகர் கோவில் அருகே தசாவதாரக் காட்சி நாடகம் நடைபெற உள்ளது. நகர் வலத்தின் கடைசி நிகழ்வாக கள்ளர் வேடம் தரித்து, பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார்.

    அதனைத் தொடர்ந்து மே 19ஆம் தேதி(திங்கள்கிழமை) கருட வாகனத்தில் புறப்பாடாகி சன்னதியை அடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயிலின் உதவி ஆணையர் பெ.ரமேஷ், செயல் அலுவலர் க.வேலுச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    நகர் வலத்தின் போது சுவாமி இறங்குமிடத்தில் பந்தல் அமைத்திருக்க வேண்டும் என திருக்கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பந்தல் உயரமாகவும், சுவாமி புறப்பாடாகி வரும் வாகனத்தில் தட்டாமலும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai