Enable Javscript for better performance
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் திருக்கல்யாணம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த திங்கட்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் இலக்குமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்ச்சியான இலக்குமி நாராயணப்பெருமாள் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டர்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெண்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடினர். தொடர்ந்து திருமணத்தை முன்னிட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் ஆகிய சம்பிரதாயங்களும் நடைபெற்றன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு புஷ்பகைங்கர்ய சபா சார்பில் சிறப்பு மலரலங்காரம், தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. பூஜைகளை திருவள்ளரை கோயில் வாசுதேவ பட்டர் தலைமையில் வரதராஜ அய்யங்கார், வெங்கட்ராம அய்யங்கார், சீனிவாசன் அய்யங்கார், கார்த்திக் அய்யங்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணிக்கு சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. வரும் புதன்கிழமை அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 108 பால்குடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு திருஆவினன்குடியில் உள்ள அருள்மிகு குழந்தைவேலாயுதசாமிக்கு உச்சிக்காலத்தின் போது அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தேரேற்றம் செய்யப்பட்டு வெள்ளித்தேர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, பழனிக்கோயில் உதவி ஆணையர் மேனகா, பேஷ்கார் ராமலிங்கம், புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதசாமி, மணியம் சேகர், காண்ட்ராக்டர் நேரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai