Enable Javscript for better performance
விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள்- Dinamani

சுடச்சுட

    

    விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவும் நோய்கள் குறித்தும், அதனை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் (திண்டுக்கல் பிரிவு) பேராசிரியர் எஸ். பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் பா. சங்கர் ஆகியோர் கூட்டாக அளித்துள்ள விளக்கம்:

    விலங்குகளோடு பழகும் மனிதர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முக்கிய வழிகளைப் பின்பற்றுதல் அவசியமாகும். பல்வேறு நோய்கள் சுகாதாரக் குறைபாட்டினாலும், கவனக் குறைவாலும், மனிதனைத் தாக்க வாய்ப்புள்ளது. இந்நோய்கள் நுண்ணுயிரி (பாக்டீரியா), நச்சுயிரி (வைரஸ்), ஒட்டுண்ணி மற்றும் பூஞ்சைக் காளான் மூலமாக மனிதனைத் தாக்குகின்றன.

    விலங்குகள் மூலம் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்:

    காசநோய், அடைப்பான் நோய் மற்றும் லெப்டோசைரோசிஸ், டெட்டனஸ் என்னும் தசை விறைப்பு நோய், தாடை வீக்க நோய், கருச்சிதைவு நோய் (புருசெல்லோசிஸ்), பன்றிச் செம்படை நோய், கிளாண்டர்ஸ் எனப்படும் நிணநீர் சுரப்பி நோய் போன்றவை நுண்ணியிரியினால் மனிதனுக்குப் பரவுகின்றன.

    வெறிநோய், மூளைக் காய்ச்சல், சிட்டகோசிஸ் எனப்படும் கிளிக் காய்ச்சல், கொப்பள நோய் ஆகியன நச்சுயிரியினால் பரவுகின்றன. ஹைடேட்டிடையோசிஸ் எனப்படும் பெருநீர் கட்டி நோய், உருண்டைப் புழு, கொக்கிப் புழு, தட்டைப் புழு போன்ற குடற்புழு நோய்கள், லீஸ்மோனியாசிஸ் எனப்படும் டம்-டம் காய்ச்சல், டாக்சோபிளாஸ்மோசிஸ் எனப்படும் கருதாக்கி நோய், தொற்று சொறி நோய், கீயூகாய்ச்சல் ஆகியவை ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகின்றன.

    நோய்த் தாக்குதலுக்கான காரணங்கள்:

    நாய் மற்றும் செல்லப் பிராணி வளர்ப்போர் அதன் இருப்பிடத்தை நன்கு கிருமிநாசினி கொண்டு தினசரி சுத்தம் செய்யாமல் விடுதல். விலங்குகளின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றுதல். நோய்ப் பரப்பிகளான பன்றி, பெருச்சாளி, பூனை, நாய், எலி, சுண்டெலி, ஈ மற்றும் கொசுக்களின் பெருக்கம். வெறிநோய் தடுப்பூசி, நாய்கள் மற்றும் பூனைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யாமல் இருத்தல் ஆகியவற்றால் நோய் தாக்கம் ஏற்படுகிறது.

    விலங்கின நோய் மனிதனுக்கு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்:

    வீட்டு விலங்குகளான நாய், பூனை மற்றும் பறவைகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போடுதல். இளம் வயது பிராணிகளுக்கு மாதந்தோறும் குடற்புழு நீக்கம் செய்தல். நோய்வாய்ப்பட்ட விலங்குகளை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல். நோயைப் பரப்பும் பூச்சியினங்கள் பரவாதிருக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்.

    விலங்கினங்களைக் கையாளும்போது அதன் கழிவுகள் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ளுதல். விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பால், முட்டை இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்து உட்கொள்ளுதல். தரம் குறைந்த கெட்டுப்போன அசைவ உணவுகளைத் தவிர்த்தல். டின் மற்றும் பாலித்தீன் உறையில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவு வகைகளை, காலாவதி தேதி மற்றும் தரமான நிறுவன பிஐஎஸ் முத்திரையுடன் பார்த்து வாங்குதல்.

    விலங்குகளுக்கு தனியாக அறை கொடுத்தும், குழந்தைகள் அருகில் விடாமலும் வளர்த்தால் நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai