Enable Javscript for better performance
கல்வியில் 25 சதவீத இட ஒதுக்கீடு:  ஆர்வம் காட்டாத பெற்றோர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கல்வியில் 25 சதவீத இட ஒதுக்கீடு:  ஆர்வம் காட்டாத பெற்றோர்கள்

    By dn  |   Published on : 14th May 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் நலிவுற்றோர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு கிடைக்கும் 25 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்களிடம் ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

      14 வயதுக்குள்பட்ட அனைத்து மாணவர்களும் கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, மத்திய அரசு 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் 2011ஆம் ஆண்டு இந்த சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டது.

      அதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டு, 2013 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

      அதன்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும் புதுமுக வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோர் இந்த சலுகையினை பெறலாம்.  ஆனால் இச்சட்டம் குறித்து, பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், 2013-14 கல்வியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 95 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளன. இதில், சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக, மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.

      2014-15 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள், மே 3ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என உத்தரவிட்டப்பட்டிருந்தது. விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்ட 10 நாள்கள் கடந்த பின்னரும், இதுவரை 73 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகம் செய்யபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

      பெரும்பாலான பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த நிர்வாகம் விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை அரசின் சார்பில் பணம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

      கடந்தாண்டுக்கான கட்டணமே இன்னும் வழங்காதபோது, தொடர்ந்து 10 ஆண்டுகள் எங்களுக்கான கல்விக் கட்டணம் எப்படி கிடைக்கும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் தனியார் பள்ளி நிர்வாகிகள்.

      25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, மாவட்டத்தில் 1300-க்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரி  ஒருவரிடம் கேட்டது: தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் மறைமுகமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

       25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமும், சில பள்ளிகள் கட்டண வசூல் நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து முறையான புகார் அளிக்க முன்வராததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

      இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க, விண்ணப்பங்கள் இல்லை என்பன உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற தனியார் பள்ளிகள் தயாராகி வருகின்றன.

    விண்ணப்பப் படிவங்கள் கிடைக்காதவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களிடம், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பணம் வசூலிப்பது குறித்தும் புகார் அளிக்கலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai