கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலங்காரச் செடிகள்
By dn | Published on : 14th May 2014 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அலங்காரச் செடிகளை உண்ணும் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின்(திண்டுக்கல்) பேராசிரியர் எஸ். பீர்முகம்மது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளது:
பருவமழை பொய்த்துப் போனதால், பெரும்பாலான இடங்களில் தீவனம் கிடைக்காமல் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனால் மேய்ச்சல் நிலங்களில் காணப்படும் விஷச்செடிகளை ஒருசில கால்நடைகள் உண்ணும்போது பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கால்நடைகளுக்கு இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் விஷச் செடிகளில் அரளி மற்றும் உன்னிச் செடிகள் முன்னிலை பெறுகின்றன.
இதுபோன்ற விஷச் செடிகள் வீடுகளில் அலங்காரச் செடிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. இவற்றை உட்கொள்ளும் போது, கால்நடைகளில் உன்னிச்செடிகளில் உள்ள லெண்டாடென் எனும் நச்சுப்பொருள் கல்லீரலில் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றன.
இதனால் உடலில் நச்சுப்பொருள்கள் சேர்ந்து, தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் ஏற்படுத்துகின்றன. மேலும் கால்நடைகளில் உற்பத்தி திறன் குறைவதோடு, உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. விஷச்செடிகளை உண்ட கால்நடைகள், தீவனம் உள்கொள்ளாது. மேலும் தோலில் உரோமம் உதிர்தல், கண்களில் உள்ள மெல்லிய படலம் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் வீக்கம், சூரிய வெளிச்சத்திற்கு பயம், நிழல் உள்ள பகுதிகளைத் தேடி அலையும் குணம், காதின் அடிப்பகுதிகள், தலைப்பகுதி மற்றும் பிறப்புறுப்புகளில் நீர் கோர்வையுடன் கூடிய வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட கால்நடைகளை சூரிய வெளிச்சம் இல்லாத, குளிர்ச்சியான கொட்டகைகளில் வைத்து பராமரிக்க வேண்டும். குறைவான புரதச்சத்து மற்றும் அதிக எரிசக்தி கொடுக்கக்கூடிய தீவனங்களை கொடுத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு பயனளிக்கும்.
விஷத்தன்மை வாய்ந்த அரளி தாவரம், அதன் மலர்களுக்காக வளர்க்கப்படுகிறது. அரளி மலர்கள் சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன. அரளி செடிகளை உட்கொள்ளும் கால்நடைகளுக்கு கண்கள் சிவந்து காணப்படும். மேலும் தோல் ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுவதோடு, இதயதுடிப்பு பாதிக்கப்பட்டு கால்நடைகள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது.
எனவே கால்நடைகளை வளர்க்கும் பகுதிகளில் இதுபோன்ற நச்சுச் செடிகளை விளை நிலங்கள், வயல் வரப்புகள், வேலிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களிலிருந்து முற்றிலும் அகற்றிட வேண்டும். அதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பினைத் தவிர்த்து, உற்பத்தி மற்றும் உயிர் இழப்புகளையும் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.