சாலைகளில் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு
By கொடைக்கானல், | Published on : 15th May 2014 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொடைக்கானல் நகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கொடைக்கானல் நகர் பகுதிகளான உகார்த்தே நகர், சீனிவாசபுரம், லாஸ்காட்சாலை, ஏரிச்சாலை, பூங்கா சாலைகளில் திரியும் மாடு, குதிரைகளால் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரிதும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளை அவிழ்த்துவிட்டுவிடுவதால் அவை மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லாமல் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை ஓட்டிச் சென்றுவிடுகின்றனர். இந் நிலையில் சுமை தூக்க முடியாத, பராமரிக்க முடியாத குதிரைகளையும் சாலைகளில் விட்டுச் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை தின்று வெறி பிடித்து நாய்கள் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் பல ஆண்டுகளுக்கு முன் நகர் பகுதிகளில் திரியும் மாடுகள், குதிரைகளை நகராட்சி வளாகத்தில் அடைத்து வைத்துவந்தனர். பிறகு அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி அவற்றை மீட்டுச் செல்வர். மேலும் நகரில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவில்லை. இதனால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே கொடைக்கானல் சாலைகளில் திரியும் கால்நடைகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர்.