Enable Javscript for better performance
திண்டுக்கல், வேடசந்தூர் பகுதிகளில் மழை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்ததை அடுத்து, வேடசந்தூர் பகுதியில் மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த வாரம், திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலவி வந்த கடுமையான வெப்ப நிலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து, 4 நாள்கள் பெய்து வந்த மழை குறைந்ததால், அதன்பின்னர் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், சிறுமலை வனப்பகுதியிலும், சின்னாளப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. ஆனால், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மதிய வேளையில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியது.

    மேலும், மழை பெய்தபோது மந்தம் அடைந்த நுங்கு, இளநீர், தர்பூசணி போன்ற குளிர்பானங்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திண்டுக்கல் பகுதியில் மீண்டும் சுமார் 1 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. இதனால், பகல் முழுவதும் நிலவிய கடுமையான வெப்பம் தணிந்ததோடு, நகரில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. வடிகால் வசதியில்லாததால், நகரின் பல இடங்களிலும் சாலைகளில் மழை நீர் ஓடியது.

    வேடசந்தூரில் இடி மின்னலுடன் மழை: திண்டுக்கல்லைத் தொடர்ந்து, வேடசந்தூர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, வேடசந்தூர் அடுத்துள்ள கருக்காம்பட்டி பகுதியில் மின் கம்பம் சாய்ந்தது. உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் இணைப்பு சரி செய்யப்பட்டது. வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில், அய்யனார் கோயில் அருகே புளிய மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai