Enable Javscript for better performance
25 சதவீத இட ஒதுக்கீட்டில் 4800 இடங்களையும் நிரப்ப ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    25 சதவீத இட ஒதுக்கீட்டில் 4800 இடங்களையும் நிரப்ப ஆட்சியர் உத்தரவு

    By திண்டுக்கல்  |   Published on : 18th May 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த புதன்கிழமை(மே 14) தினமணியில் செய்தி வெளியானது.

    அதன் எதிரொலியாக மெட்ரிக். பள்ளிகளில் 25சதவீத இட ஒதுக்கீட்டில் உள்ள 4868 இடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

    சுயநிதி பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சனிக்கிழமை(மே 17) நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியது:

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009ன் படி சிறுபான்மையினர் பள்ளி நீங்கலாக, மற்ற அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.

    கடந்த 3ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 4868 இடங்களுக்கு, அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. 10 நாள்களை கடந்த பின்னும் இதுவரை 120 விண்ணப்பம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த சட்டத்தின் மூலம் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில், 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக(100 சதவீதம்) செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விண்ணப்பம் வழங்குவதற்காக மே 18ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மே 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் மே 31ஆம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும்.

    கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்ட அளவில் 62 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. அதனை இந்த கல்வியாண்டு முதல் 100 சதவீதம் மாணவர்களை சேர்த்து இலக்கினை அடைய வேண்டும். 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டம் வெற்றி அடைவதன் மூலம், குழந்தை தொழிலாளர்களை ஒழித்து எதிர்கால சமுதாயத்தை முழுமையான கல்வி பெற்றதாக மாற்ற முடியும் என்றார் அவர்.

    கூட்டத்தில் தொடக்கக்கல்வித் துறை(உதவி பெறும் பள்ளிகள்) இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பி.சுகுமார்தேவதாஸ், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பி.முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பொ.சிவானந்தம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எஸ்.பால்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai