Enable Javscript for better performance
மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்ட கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.சுகுமார் தேவதாஸ் தலைமை வகித்தார்.

      நண்பகல் 12 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது. கல்வித் துறை அதிகாரிகளின் ஏற்பாட்டில் பல இடங்களிலிருந்தும் மாணவர்கள் வேன் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.  வழிகாட்டு நிகழ்ச்சியில் தலைசிறந்த பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்களின் சிறப்புரை நிகழ்த்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

     பின்னர் தொடங்கிய நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.சுகுமார் தேவதாஸ் பேசியது:

     பெற்றோர்கள், தங்களின் இளம் வயது ஆசைகளையும், விருப்பத்தையும், குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இன்றைய நிலையில் குடிமைப்பணி(ஐஏஎஸ், ஐபிஎஸ்), மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கு பெற்றோர்களின் வற்புறுத்தலே காரணம். பெற்றோர்களின் விருப்பத்திற்காக மட்டுமல்லாமல், தங்களை சுய பரிசோதனை செய்து, சிறந்த துறைகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். பொறியியல் துறையில் எந்த பிரிவை தேர்வு செய்தால் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆராய்ந்து, அதனை தேர்வு செய்ய வேண்டும்.

     ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பழைய பாதையிலேயே செல்வதை தவிர்த்து, ஒவ்வொரு துறையிலும் புதிய பாதைகளை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள சாலை பாதுகாப்பு பொறியாளர் பதவிக்கு நாடு முழுவதும் 20 பேர் மட்டுமே உள்ளனர். அதுபோன்ற துறைகளை மாணவர்கள் கண்டறிந்து பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

     அதனைத் தொடர்ந்து மருத்துவத் துறை, நீதித்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் சிறப்புரை நிகழ்த்தினர்.

    மாணவர்கள் கோரிக்கை:  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்த பின், அனைத்து மாணவர்களும் பொறியியல், மருத்துவம் என ஒவ்வொரு துறைக்கும் விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வழிகாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

     மேலும், ஒவ்வொரு துறையிலும் தமிழக அளவில் சிறந்த விளங்கும் பேச்சாளர்களை வரவழைத்து வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் பலருக்கும் பயனளித்து இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai