Enable Javscript for better performance
உத்தமபாளையத்தில் வழிப்பறி செய்த இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உத்தமபாளையம் அருகே கோம்பை செல்லும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து வழிபறி செய்துவிட்டு தப்பிய இருவரை, போலீஸார் கைது செய்தனர்.

       உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனி, இந்திரா நகர் மற்றும் கோட்டைமேடு போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே இரவு நேரங்களில் திருடர்கள் நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில், வீடுகளுக்கு வெளியே வைக்கப்படும் சைக்கிள்கள், பாத்திரங்கள், சிலிண்டர்கள், மின்மோட்டார் உள்ளிட்ட பல பொருள்கள் அடிக்கடி திருடு போவதாகவும், இது சம்பந்தமாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர்.  மேலும், இரவு நேரங்களில் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளிலும் திருட்டு நடந்து வருகிறது.

      இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் மகன் சவரிமுத்து என்பவர், உத்தமபாளையம்-கோம்பை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த யேசுராஜ் மகன் ரோபின்(16), பழனிச்சாமி மகன் வினோத் (17) ஆகிய இருவரும், சவரிமுத்துவை வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர், சவரிமுத்துவிடமிருந்து ரூ. 1,700 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

       காயமடைந்த சவரிமுத்து, உத்தமபாளையம் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், சவரிமுத்து கொடுத்த புகாரை அடுத்து, உத்தமபாளையம் போலீஸார் தப்பியோடிய ரோபின், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

      மேலும், உத்தமபாளையம் பகுதியில் நடந்துள்ள பல திருட்டுகளுக்கும்  இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai