Enable Javscript for better performance
கொடைக்கானல் படகு குழாம் சார்பில் 124ஆவது படகுப் போட்டி - Dinamani

சுடச்சுட

    

    கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் படகு குழாம் சார்பில் படகுப் போட்டி நடைபெறுகிறது.

      கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், பல்வேறு துறைகள் சார்பில் கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், கொடைக்கானல் ஏரியில் ஆண்டுதோறும் நடைபெறும் படகுப் போட்டிக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

      இது குறித்து, படகு குழாம் சங்க கௌரவச் செயலர் ஜி.பவானி சங்கர் கூறியது:கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் படகு குழாம் சங்கம் சார்பில் 124ஆவது படகுப் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இப் போட்டியை, கடலோரக் காவல்படை துணைத் தலைவர் சி. சைலேந்திரபாபு தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார்.

     தமிழக விளையாட்டுத் துறை முதன்மைச் செயலர் வி.கே. ஜெயக்கொடி முன்னிலை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்குகிறார்.

      போட்டியில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

      இதில், தட்டைப் படகு, பெடல் படகு, ரோயிங் படகுப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர், சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாத்து பிடிக்கும் போட்டியும், ஒலிம்பிக்கில் நடைபெறும் ஸ்கல் படகுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் முன்னோட்ட படகுப் போட்டியும் நடைபெறுகின்றன.

      ஒலிம்பிக், ஆசிய மற்றும் அகில இந்திய அளவில் நடைபெறும் படகுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் கொடைக்கானல் படகு சங்கத்தை தேர்வு செய்து, சுமார் ஒரு மாதம் பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

      இந்த படகுப் போட்டியானது, 2 நாள்கள் நடைபெறுகின்றன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai