Enable Javscript for better performance
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 16 பேர் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், சுபாஷ் பண்ணையார் உள்பட 16 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராயினர்.

      தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

      இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

      வழக்கில் தொடர்புடைய 18 பேரில், புறா மாடசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த முத்துப்பாண்டி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

      இதில், முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள சுபாஷ் பண்ணையார், ஆறுமுகசாமி, அருள், மாடசாமி, சண்முகம், நடராஜன், ஆனந்தன், தாராசிங், அருள் ஆனந்தன், அந்தோணி, பிரபு, சின்னப்பா, ரமேஷ், நிர்மலா, அருண்மொழி ஆகிய 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். வேறொரு வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ், போலீஸ் பாதுகாப்புடன் தனியாக அழைத்து வரப்பட்டார்.

      வழக்கில் தொடர்புடைய 16 பேரும் ஆஜரானதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

      நீதித்துறை நடுவர் எம். சையது சுலைமான் உசேன், வழக்கின் விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai