Enable Javscript for better performance
பழனியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

    பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 20 நர்சரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் குழந்தைகளையும், மாணவ, மாணவியரையும் பள்ளிக்கு அழைத்து வர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

      பழனியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வினை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அமிர்தஈஸ்வரன் தலைமையில், கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி, ஆய்வாளர்கள் வீரகாந்தி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடத்தினர்.   பள்ளி வாகனங்களில் உள்ள இருக்கைகள், பாடப் புத்தகங்கள் வைக்கப்படும் தட்டுகள்,அவசர வழி ஆகியன ஆய்வு செய்யப்பட்டன. பல்வேறு வாகனங்களில் இருக்கைகள்,அவசரவழி உள்ளிட்டவை சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.

      இதுபோன்ற பல்வேறு குறைகள் உள்ள 6 வாகனங்களை பழுது நீக்கி கொண்டு வர கூறப்பட்டது. மேலும், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவி கருவி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதா என்பதும் கண்காணிக்கப்பட்டது.

      மாவட்ட அளவில் முதன்முதலாக பழனியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அமிர்தஈஸ்வரன் தெரிவித்தது:

      வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டு, சரிசெய்து மீண்டும் கொண்டுவர கூறியுள்ளோம். பள்ளிகள் திறக்கும் முன் இந்த ஆய்வுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்படுகின்றன. பள்ளி வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர், குழந்தைகளை ஏற்றிவிடும் அட்டெண்டர் ஆகியோரது சான்றிதழ்கள், நடத்தை குறித்தும் கேட்டறியப்படும்.

       மேலும், வாகனத்தின் சான்றுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக சுமார் 29 செ.மீ. உயரத்தில் நகரும் வகையிலான படிக்கட்டு அமைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

       பழனியில் உள்ள ஆட்டோக்களின் பர்மிட்டுகள் ஆய்வு செய்யவும், அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர்களும் அக்கறை மேற்கொண்டால், ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பயணிப்பதை தவிர்க்கலாம் எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai