Enable Javscript for better performance
கொடைக்கானலில் சொட்டு நீர்ப்பாசன முறையில் விவசாயப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் சொட்டு நீர்ப்பாசன முறையில் விவசாயப் பணிகள்

    By கொடைக்கானல்  |   Published on : 23rd May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததால், சொட்டு நீர்ப்பாசன முறையில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கொடைக்கானல் பகுதிகளில் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கிருந்து உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு மற்றும் பழ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு, வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கொடைக்கானலில் ஆண்டுக்கு சுமார் 1600 மி.மீ. அளவு மழை பெய்யவேண்டும். ஆனால், கடந்தாண்டு சுமார் 540 மி.மீ. அளவே மழை பெய்தது.

      மேலும், கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துள்ளதால், விவசாயப் பணிகளில் பெருமளவு சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைந்தனர். இதனால், விவசாய நிலங்கள் பெருமளவு விற்பனை செய்யப்பட்டு, அப்பகுதிகளில் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.  10 முதல் 25 ஏக்கர் வரை வைத்துள்ள பெரும் விவசாயிகள், கிணறு, மோட்டார்,  மற்றும் சொட்டு நீர்ப்பாசன மூலம் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலங்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் போன்ற அதிக பராமரிப்பு தேவைப்படும் காய்கறிகளை உற்பத்தி செய்து, நல்ல விலைக்கு விற்று வருகின்றனர்.

      இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் நகர் மற்றும் விவசாயம் நடைபெறும் பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காமல் கீழே செல்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் இல்லை. நீரோடைகளும் வற்றிப் போயுள்ளன. அவ்வப்போது பெய்யும் மழையின் மூலம் விவசாயப் பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வசதியுள்ளவர்களே சொட்டு நீர்ப்பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.   இதனால், சாதாரண விவசாயிகள் நிலத்தை பராமரிக்க முடியாமல் விற்பனை செய்து விடுகின்றனர். எனவே, விவசாய நிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. குளுமையான சீதோஷ்ண நிலை மாறி, மழையளவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

        கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சோலா மரங்கள், பழ வகை மரங்கள் நடுவதற்கும், விவசாய நிலங்களில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதை ஆய்வு செய்யவும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான், விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும். இல்லையெனில், வருங்காலத்தில்  கொடைக்கானலில் எங்கு பார்த்தாலும் சிமெண்ட் கட்டடங்கள் மட்டுமே இருக்கும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai