Enable Javscript for better performance
புலியை விஷம் வைத்துக் கொன்றதாக இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் வனப் பகுதியில் புலியை விஷம் வைத்து கொன்று அதனுடைய தோலை விற்பனை செய்வதற்கு உதவி செய்தவர்களை வனத் துறையினர் கைது செய்தனர்.

    இதுகுறித்து கொடைக்கானல் உதவி வனப் பாதுகாவலர் பார்த்திபன் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கூக்கால் வனப் பகுதியில் அருகிலுள்ள கிராம மக்கள் மாடுகளை மேய்த்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன் புலி தாக்கியதில் சில மாடுகள் இறந்துள்ளன.

    கூக்கால் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மாடு புலி தாக்கி இறந்துள்ளது. அப் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (57), தனசுந்தரம் (55) மற்றும் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து புலியைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர். மாட்டு இறைச்சியில் விஷத்தைத் தடவி புலி நடமாடும் பகுதியில் வைத்துள்ளனர். மாட்டு இறைச்சியை சாப்பிட்ட புலி அங்கேயே இறந்துவிட்டது.

    அதனைத் தொடர்ந்து, புலியின் தோல், பற்கள், நகம் ஆகியவற்றை எடுத்து விட்டு கூக்கால் வனப் பகுதியில் புலியுன் உடலை புதைத்துள்ளனர். அதன் பிறகு கோவை பகுதியில் உள்ள நண்பர்கள் மூலம் புலித் தோலை விற்பனை செய்துள்ளனர்.

    அப்போது கோவை வனத் துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கொடைக்கானல் கூக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    வியாழக்கிழமை இரவு கூக்கால் வனப் பகுதியில் மூன்று பேர் ஆயுதங்களுடன் இருந்துள்ளனர். வனத் துறையினரைப் பார்த்ததும் அவர்கள் ஓட ஆரம்பித்தனர். வனத் துறையினர் அவர்களை விரட்டி, இருவரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கூக்கால் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (57), தனசுந்தரம் (55) எனவும், புலியைக் கொன்றவர்கள் எனவும் தெரியவந்தது. இவர்களது கூட்டாளியான கார்த்திக் என்பவரைத் தேடி வருகிறோம் என்றார்.

    கொடைக்கானலில் கடந்த 4-தேதி வன விலங்குகளான புலி, சிறுத்தை, மான் போன்றவற்றின் உறுப்புகளை விற்பனை செய்தவர்களை வனத் துறையினர் கைது செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக புலியை விஷம் வைத்து கொன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai