ஊரக வேலை திட்ட பயனாளிகளை விவசாயப் பணியில் ஈடுபடுத்த கோரிக்கை
By திண்டுக்கல் | Published on : 25th May 2014 12:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளை, விவசாயப் பணிகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கே.மனோகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது:
கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள 2065 குளங்களும், 85ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இந்த சூழ்நிலையில் குளங்களில் உள்ள வண்டல் மண் மற்றும் கரிசல் மண் அள்ளுவதற்கு, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதன்மூலம் குளங்களை தூர்வார முடியும்.
அதேபோல் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்ட பயனாளிகளை, விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலக்கோட்டை கண்மாயை உடனடியாக மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மேலும் நத்தம் பகுதியில் சூறைக்காற்றினால் சேதமடைந்த ஆயிரக்கணக்கான வாழைகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து இதுவரை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், வேளாண்மைத்துறை அதிகாரிகளும் பதில் அளித்து பேசினர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மு.ச.பாண்டிராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சம்பத்குமார், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் த.செல்வக்குமரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராமநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.