மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்
By கொடைக்கானல், | Published on : 25th May 2014 12:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொடைக்கானலில் சீசன் மற்றும் கோடை விழாவை முன்னிட்டு 53-வது மலர்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகிக்கிறார். கோடை விழாவை தமிழக நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைத்துப் பேசுகிறார்.
மின்சாரம் மற்றும் மது விலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் இரா,விசுவநாதன் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கி வைக்கிறார். மலர்க் கண்காட்சியினை வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி.எஸ்.என். கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைக்கிறார். கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடக்கி வைக்கிறார். முன்னதாக, சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்கிறார்.
விழாவில் வேணுகோபாலு எம்.எல்.ஏ., கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) டி.எட்வர்ட், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பொன்னுத்துரை மற்றும் தோட்டக்கலைத் துறை, கொடைக்கானல் நகரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளட்ட பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மலர்க் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 80-வகையான 5 லட்சம் மலர்களைக் கொண்டு கண்கவரும் வகையில் மலர்க் கண்காட்சி அமைக்கப்படுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு பிரமிடு, இந்திரன், யானை போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு அரங்குகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக குடிநீர், கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு வசதிக்காக கூடுதலாக காவல் துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலர்க் கண்காட்சி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.