Enable Javscript for better performance
சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி குழந்தைகளுடன், பெண் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி குழந்தைகளுடன், பெண் தீக்குளிக்க முயற்சி

    By திண்டுக்கல்  |   Published on : 27th May 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொத்துக்களை மீட்டுத்தரக் கோரி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அடுத்துள்ள ராஜதானிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மனைவி லட்சுமி(30), தனது குழந்தைகள் சத்யா மற்றும் செல்வஸ்ரீ ஆகியோருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்துள்ளார்.

    அவர் கையில் இரண்டு மண்ணெண்ணெய் கேனுடன் வருவதைப் பார்த்த போலீஸார், அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். தனது குடும்பத்துக்குச் சேர வேண்டிய சொத்துக்களை, கணவரின் அண்ணன் அபகரித்துவிட்டதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

    ராஜதானிக்கோட்டை பகுதியில் எனது கணவர் செந்தில்குமாரின் தந்தை பெயரில், 2 வீடுகளும், 5 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த சொத்துக்கள் அனைத்தையும் செந்தில்குமாருக்கு மது வாங்கி கொடுத்து, அவர் மயக்கத்தில் இருந்தபோது தனது பெயருக்கு அவரது அண்ணன் மாற்றிக்கொண்டார்.

    இதனால் மிகவும் ஏழ்மையில் உள்ள எங்கள் குடும்பத்தை காப்பாற்ற எனது கணவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு கிடைக்க வேண்டிய வீடு மற்றும் 2.5 ஏக்கர் நிலம் ஆகியவற்றை மீட்டுத் தரும்படி, ஆட்சியரிடம் மனுக்கொடுக்க வந்தேன். உரிய நிவாரணம் கிடைக்காத நிலையில் தீக்குளிக்க வசதியாக, மண்ணெண்ணெய்யும் எடுத்து வந்தேன். அதனை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர் என்றார்.

    விசாரணைக்கு பின், போலீஸார் எச்சரிக்கை செய்து லட்சுமியை, அவரது குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai