Enable Javscript for better performance
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு:இனிப்பு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு:இனிப்பு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்

    By திண்டுக்கல்,  |   Published on : 27th May 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.

    எதிர்க்கட்சியான காங்கிரûஸச் சேர்ந்தவர்கள் இனிப்பு வழங்கியது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    நாட்டின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை பதவி ஏற்றார். இதனை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வினரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கூட்டணி கட்சியினரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் தலைமையில் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளும், நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

    காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவராக இருப்பவர் ஏ.அப்துல் ஜபார். கல்லூரி மாணவராக இருந்தபோது, 1967ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக காங்கிரஸ் சிறுபான்மையினர் அமைப்பின் மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திங்கள்கிழமை காலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நாகல் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில், காங்கிரஸ் சிறுபான்மையினர் அமைப்பின் நகரச் செயலர் பஷீர் அகமது, நிர்வாகிகள் எம்.எச்.காஜாமைதீன், இஸ்திகார் அலி, செல்லையா, ஐஎன்டியூசி செல்வம் மற்றும் சிதம்பரம் ஆகியோரும் அப்துல் ஜபாருடன் சேர்ந்து இனிப்பு வழங்கினர்.

    இதுகுறித்து அப்துல் ஜபார் தெரிவித்தது: மோடி வாராணசியில் பிரசாரம் மேற்கொண்டபோது, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல், சுதந்திர போராட்ட தியாகி நிஜாமுதீன் காலில் விழுந்து வணங்கினார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபின், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்திய மோடி, பதவியைக் காட்டிலும், நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் நலனே முக்கியம் என்று அறிவித்ததன் மூலம், அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் மோடிக்கு கிடைத்துள்ளது.

    அதனால் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த நானும், நரேந்திர மோடிக்காக மகிழ்ச்சியோடு இனிப்பு வழங்கினேன். 2002-இல் குஜராத்திலும், 2013-இல் உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரிலும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மோடிக்கு அனுப்ப உள்ளேன் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai